
“சோசலிசம்” மற்றும் “மதச்சார்பின்மை” என்ற இரண்டு சொற்களை அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்த்ததன் மூலம் அரசியலமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. நாம் நடுநிலையாக இருந்தால், சத்திரங்களுக்கு (வைணவ மடங்கள்), நம்கர்களுக்கு (சமூக பிரார்த்தனை மண்டபங்கள்), கோயில்களுக்கு வேலை செய்ய முடியாது.
வேதங்களின் விஷயங்களைப் பற்றி விவாதிக்க முடியாது. கீதை பற்றி விவாதிக்க முடியாது. இப்போது, நான் எப்படி மதச்சார்பற்றவனாக இருக்க முடியும்? எனவே, நான் ஒரு தீவிர இந்து. என்னால் மதச்சார்பற்றவனாக இருக்க முடியாது” என பகிரங்கமாகப் பேசியது ஆர்.எஸ்.எஸ் தொண்டர் அல்ல… அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா.

“இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையாகவும், நம்பிக்கையுடனும் நான் பணி செய்வேன்; சட்டம் மற்றும் அரசியலமைப்பின் படி அனைத்தையும் நடத்துவேன்” என இந்திய அரசியலைப்பை வைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்ட ஒரு மாநில முதல்வர், அரசியலமைப்புக்கு நேரெதிர் கருத்தை எப்படி தெரிவிக்க முடியுமா? என சமூக ஊடகங்களில் விவாதம் கிளம்பியது. இவர் பேசுவதற்கு முன்னர் இதேக் கருத்தை ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளரும் தெரிவித்திருந்தார்.
இவர்களின் இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்னால், இந்த இந்திய தேசம் குறித்து, இந்தியாவை கட்டமைத்தத் தலைவர்களின் கருத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பல்வேறு மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட 543 சமஸ்தானங்களாக இருந்த மாகாணங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட நாடுதான் இந்தியா. ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு கீழே இருந்த இந்த நாட்டை சுதந்திர நாடாக்க வேண்டும் எனப் போராடிய பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தலைமைத் தாங்கிய இந்தியாவின் தேசத் தந்தை மகாதமா காந்தி: 1938-ம் ஆண்டு ஜூலை 9 அன்று வெளியான ஹரிஜன் பத்திரிக்கையில், “மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அரசியலும் மதமும் கலந்துவிடக் கூடாது. அரசியல் மதத்திலிருந்து பிரிந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அரசியல் மீது மதம் அதிகாரம் செலுத்தினால் அது ஆபத்தானது.” என எழுதியிருக்கிறார்.
1944-ம் ஆண்டு INA Radio Broadcasts-ல் பேசிய சுபாஷ் சந்திரபோஸ்: “எங்கள் போராட்டம் எந்த மதத்திற்காகவும் அல்ல, நாடிற்காக. இந்தியா சாதி, மதம், பிரிவினை எதையும் பொருட்படுத்தாமல் ஒன்றுபட்டு இருக்கும்” என்றார்.

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு: “நாம் நம் நாட்டை மதச்சார்பற்ற நாடாகக் கூறுகிறோம்… நம்மிடம் பல மதங்கள் உள்ளன, அனைத்து மதத்தையும் சமமாக மதிக்க வேண்டும்.” (Speech in Constituent Assembly, November 26, 1946). எனவும்,
சட்ட மாமேதை அம்பேத்கர்: “இந்திய அரசு முற்றிலும் மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும்… மதம் என்பது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும்.”- (Constituent Assembly Debates, November 25, 1949) என்றார்.
இப்படி நம் நாடு ஆரம்பம் முதலே அரசியலையும், மதத்தையும் தனித்தனியே பிரித்து, ஒவ்வொரு மதத்துக்கும் அதெற்கனத் தனியுரிமைகளை வழங்கியிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற உன்னதமான அழகை உலகுக்கு முன்மாதிரியாக காண்பிக்கிறது.
அரசா – மதமா எதை முதன்மைபடுத்த வேண்டும்?
ஆரம்ப காலத்தில் மதம் என்பது மனிதனை ஒழுங்குப்படுத்தி, இறைவனை நோக்கி மனிதனை அழைத்துச் செல்லும் பாதை என்ற நம்பிக்கை இருந்தது. அதன் அடிப்படையில், அரசை விட மதமே உயர்ந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில், அரசியலுக்காகவே மதம் என்ற நிலை உருவாகி, அதன்மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் வேலைகள் தொடங்கியது. அப்போதுதான், மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பம். அதை அரசோடு இணைப்பது நிர்வாக சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து, எல்லா மக்களுக்கும் பொதுவான அரச நிர்வாகமே முன்னிலைப்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில்தான் சுவாமி விவேகானந்தர், “இந்தியா எதிர்காலத்தில் வளர்ந்த நாடாக வேண்டுமென்றால், முதலில் சமூகத்தில் உள் நல்லிணக்கத்தை அடைய வேண்டும். மத நல்லிணக்கத்தை அடைய சகிப்புத்தன்மையை விட ஏற்றுக்கொள்ளல் தேவை. ஏனென்றால் சகிப்புத்தன்மைக்கு வரம்பு உள்ளது. ஆனால் நீங்கள் மற்ற சக மதத்தினரை ஏற்றுக்கொண்டு வாழ அனுமதித்தால், உங்களுக்கு சகிப்புத்தன்மையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது” என்றார்.
ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை வாசித்தால், அரசாட்சியில் தேவாலயங்களின் தலையீடு மிதமிஞ்சியதாக இருந்ததை அறிந்துகொள்ள முடியும். பிறகு வெடித்த புரட்சியில், அந்த நாடுகளில் முதலாளித்துவ மக்களாட்சி உருவானபோது அரசாட்சியிலும், அரசியலிலும் இருந்து தேவாலயங்கள் விலக்கி நிறுத்தப்பட வேண்டிய அவசியம் உணர்த்தப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் மதம் வகித்த முக்கியத்துவமும், அதற்குப் பிறகு பிறந்த மதச்சார்பின்மை என்ற தத்துவ அரசும், ஒரு நாடு மதத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு உதாரணங்களாக இப்போதுவரை வரலாற்று ஆய்வாளர்களால் எழுதப்படுகிறது. இந்த வரலாற்றுப் பின்னணியில் அரசியலும், மதமும் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்ற பார்வை, இந்திய மக்களாட்சியை பாதுகாக்க மிக மிக அவசியம் என்கிறார் வரலாற்றாசிரியர் முகுல் கேசவன்.
அதேப் போல மதச்சார்பின்மை என்பது சிறுபான்மையினருக்கு அளிக்கும் ஆதரவல்ல. அது எல்லா மதத்தையும் சமமாக மதிக்கும் நெறிமுறை என்கிறார் ஜவஹர்லால் நேரு.

இந்தக் கருத்தாக்கத்தின் பின்னணியில் சட்ட நிபுணரும், வழக்கறிஞருமான ஆர். பூபதியிடம் சிலக் கேள்விகளை முன்வைத்தோம். ‘ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சோசலிசமும், மதச்சார்பின்மையும் அவசியம்’ எனப் பேசத் தொடங்கியவர், “1976-ம் ஆண்டு 42-வது அமெண்ட்மென்டில் இந்திரா காந்தியால் அரசியலைப்பின் முன்னுரையில் கொண்டுவரப்பட்டதுதான் சோசலிசமும், மதச்சார்பின்மையும். அப்போதே இதைக் கொண்டுவந்ததால்தான் இந்தியாவின் வளர்ச்சி இந்தளவுக்கு இருக்கிறது.
ஒருவேளை இந்தியா மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால், சாதிச் சண்டை, மதச்சண்டை, கலவரம் போன்றவற்றிலேயே நம் நாட்டின் பெரும்பலத்தை, பொருளாதாரத்தை இழந்திருப்போம்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநில முதல்வரும் ‘அரசியலமைப்பின்படி என் மாநிலத்தை வழிநடத்துவேன்’ எனக் கூறிதான் பதவியே ஏற்பார்கள். அப்படி பதவியேற்ற முதல்வர் ஒருவர், ‘நான் மதச்சார்பற்றவனாக இருக்க முடியாது’ எனப் பேசுவது வெட்கக்கேடு.
‘நான் மதச்சார்புடையவன்’ எனத் தனிநபர் கூறியிருந்தால் அது அவரின் அறியாமை என்றோ, அல்லது காலப்போக்கில் இதன் பொருளை அவர் புரிந்துகொள்வார் என்றோ கடந்துவிடலாம். ஆனால், ஒரு மாநிலத்தின் அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் இப்படி பேசியிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது.
இது அரசியலமைப்புக்கே எதிரானது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசு இதை ஆதரிக்கிறதா? அல்லது எதிர்த்து ஆளுநர் மூலம் அந்த முதல்வருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறதா? என மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
அரசியலமைப்புக்கு எதிராகப் பேசும் முதல்வர் அந்தப் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்போதுதான் ‘அரசியலமைப்புக்கு எதிராகப் பேசுவது என் உரிமை’ எனக் கருதும் பலருக்கும் அது தவறு எனப் புரியும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் மதச்சார்பின்மை, சமநீதி பொதுவுடமை போன்ற வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் நீக்கவோ, மாற்றவோ முடியும்தான். ஆனால், அதற்கான அவசியம் என்ன?

இந்த வார்த்தைகளை நீக்கிவிட்டால் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியுமா? இதனால் யாருக்கு என்ன லாபம்?
அரசியலமைப்பின் ஆர்ட்டிகிள் 14, ‘எந்த மாநில அரசும் எந்த தனிநபரையும் மொழி, இனம், மதம் சார்ந்து ஏற்றத்தாழ்வுகளைக் காண்பிக்கக்கூடாது’ என்கிறது. இதைத்தான் 1976-ம் ஆண்டு அரசியலமைப்பின் முன்னுரையில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையின் மூலம் கொண்டுவரப்பட்டது.
இதைக் கொண்டுவருவதற்குக் காரணம் அப்போது வளர்ந்துவந்த இந்துத்துவ சித்தாந்தம்தான். அதனால்தான் இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கையை உலகுக்கு அழுத்தமாக சொல்ல வேண்டிய கட்டாயம் அப்போது ஆட்சியில் இருந்த பிரதமருக்கு ஏற்பட்டது.
அரசு எல்லோரையும் சமமாக நடத்தினாலோ, நாட்டு மக்கள் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து எல்லோரையும் சமமாக மதித்தாலோ இந்த வார்த்தைகள் தானாகவே செயலழிந்துவிடும். அப்படியான சூழல் வரும்வரை இந்த வார்த்தைகளுக்கான முக்கியத்துவம் இருந்துகொண்டேதான் இருக்கும்.
1976-ம் ஆண்டு முன்னுரைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு வார்த்தை, 50 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு அரசை அச்சுறுத்துகிறது என்றால், அந்த அரசின் ஆட்சியில் எந்தளவு மதச்சார்பின்மையும், சோசலிசமும் செயல்படுத்தப்பட்டிருக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
இறுதியாக மக்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். சோசலிசம், மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்திய அரசியலமைப்பின் அடிப்படைதான் சோசலிசமும், மதச்சார்பின்மையும். அரசியலமைப்பு வெறும் புத்தகமல்ல. அது உயிருள்ள ஆவணம்” எனக் குறிப்பிட்டு அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பின் மூலம் மதச்சார்பின்மையும், சோசலிசமும் இந்த நாட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாட்டுமக்களுக்கு நீதிமன்றம் உணர்த்தியிருக்கிறது.” என்றார்.
மேலும் சில கேள்விகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக பேச ஊடகவியலாளர் S.P லட்சுமணனை தொடர்புகொண்டோம். அவர், “என்னைப் பொறுத்தவரை அவர்கள் அவர்களின் கொள்கையில் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அகண்ட பாரதம், ஹிந்து ராஷ்டிரம்தான் அவர்களின் கொள்கை. அதனால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.
ஆனால், அரசியலைப்புச் சட்டத்தின் உள்ளே ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை இல்லையே தவிர, அதன் மொத்தக் கரு மதச்சார்பற்ற நாடு என்ற இலக்கை நோக்கியே இந்தியாவை வழிநடத்தும் கொள்கைகள்தான்.
‘எல்லா மதத்தவரும் இங்கு சமம்’ என்ற கருத்தே எந்த மதமும் உயர்ந்தது அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது. இந்த சூழலை மாற்றும் அவர்களின் திட்டத்தால்தான், பா.ஜ.க சித்தாந்தம் இந்த நாட்டுக்கு அச்சுறுத்தல் என்றக் குரல் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்தது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிக முக்கியமான பிரசாரம் ‘அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள்’ என்றக் காங்கிரஸின் குரல்தான். இந்தக் குரல் மக்களுக்குப் புரிந்தது. அதனால்தான் பெரும்பான்மை கிடைக்காமல் பா.ஜ.க சரிவை சந்தித்தது.
இன்னும் சொல்வதானால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் பல சலசலப்புகள் இருந்தது. உறுதியான கூட்டணி என்றுக்கூட நம்மால் சொல்ல முடியாது. அந்த கூட்டணி பா.ஜ.க-வின் பெரும்பான்மை இடத்தைப் பெறவிடாமல் தடுத்தற்கு காரணம், அரசியலமைப்பு மீது பா.ஜ.க கைவைக்கப் போகிறது என்ற பிரசாரம்தான்.
உத்தரப்பிரதேசத்தில் கூட அவர்களின் வெற்றி கணிசமாக குறைந்தது. எனவே, இப்போதைக்கு அவர்களால் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தமுடியாது.
இந்தியாவில் யார் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். அதற்கான முழு சுதந்திரத்தை இந்தியா கொடுத்திருக்கிறது. அந்த வகையில் அஸ்ஸாம் முதல்வர் தன்னை இந்துவாக காட்டிக்கொள்ளலாம்.
மோடி
ஆனால், அவரின் வார்த்தைகளின் வீரியத்தை அஸ்ஸாம் மக்களும், இந்திய மக்களும்தான் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் கிறிஸ்தவர்களிடம் ஆர்.எஸ்.எஸ் செய்த நுண்ணிய அரசியல் பிரசாரத்தால்தான் பா.ஜ.க அஸ்ஸாமில் ஆட்சியைக் கைப்பற்றியது. இப்போது இந்துகளும், சிறுபான்மையினரும் பா.ஜ.கவின் சூழ்ச்சியை புரிந்துக்கொள்ள வேண்டுடிய சூழல் ஏற்பட்டுவிட்டது.
இந்தியாவை இந்துகள் இந்து நாடு என்றும், முஸ்லிம்கள் முஸ்லிம் நாடு என்றும், கிறிஸ்தவர்கள் அவர்கள் நாடு என்றும், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் நாடு என்றும் ஆளாளுக்கு சொந்தம் கொண்டாட இந்தியர்கள் எல்லோருக்கும் உரிமை உண்டு. அப்படி கேட்டால் நாட்டின் நிலை என்னவாகும்?
சரி… ஒரு வாதத்துக்காக பெரும்பான்மையாக இருப்பதால் இப்படி கேட்கிறார்கள் என்றால், இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினரை அழித்து ஒழித்துவிடலாமா? இதை மனசாட்சியுடையவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இந்து நாடாக அறிவித்தப்பிறகு பிற மதத்தவர்களின் நிலை என்ன? இதற்கு யாரிடமாவது நேர்மையான, நீதமான பதில் இருக்கிறதா?
நான் ஒரு இந்துவாக இருந்தே இந்தக் கேள்வியை கேட்கிறேன். இந்து நாடாக அறிவித்து என்ன செய்யப்போகிறீர்கள்? இதற்கு வெளிப்படையாக பதில் சொல்ல முடியுமா? இந்து நாடாக அறிவித்தப்பிறகும் சிறுபான்மையினர் இங்கு வாழலாம் என்றால், அதுதான் இப்போதும் இருக்கிறது.

இதில் என்ன பிரச்னை? இதை சீர்குலைக்க முயற்சிப்பது ஏன்? இந்திய அரசியலமைப்பின் சாறு மதச்சார்பற்ற இந்தியா என்பதுதான். இதைதான் 1976-ல் இந்திரா காந்தி அறிவித்தார்.
அவர் இந்த வார்த்தையைப் புதிதாகக் கொண்டுவந்தால் என்ன? நல்ல விஷயம்தானே. இதில் என்னப் பிரச்னை இருக்கிறது?
என் அடையாளம், என் மதம் மட்டும்தான் உயர்ந்தது என, எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் இந்தக் கோஷத்தைக் கொண்டுவந்தாலும், அந்தக் கருத்தை வேரோடு வெட்டிசாய்க்கவேண்டும். எனவே, இவர்களின் இந்த வாதம் விவாதத்துக்குக்கூட தகுதியற்ற வாதம்.” என்றார்.