Seeman

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அனிருத் இசையில் கௌதம் தின்னனுரி இயக்கிய திரைப்படம் கிங்டம்.

இந்தத் திரைப்படம் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவதாகக் கூறும் நாம் தமிழர் கட்சி, இப்படத்தைத் திரையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் நிறுத்தாவிட்டால் திரையரங்குகளை முற்றுகையிட்டு நிறுத்துவோம் என்றும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்!

அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

Kingdom Movie
Kingdom Movie

கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. ஈழத்தமிழர்கள் மலையகத்தமிழர்களை ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு;

மிகப்பெரும் மோசடித்தனம். வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி, ஈழச்சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்குக் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமான தமிழீழச் சோசலிசக் குடியரசை அடைவதற்கு இரத்தம் சிந்தி, உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்து, உயிரை விலையாகக் கொடுத்து, உயிரீந்த மாவீரர்களின் ஒப்பற்ற வீரவரலாறே தமிழீழ விடுதலைப் போராட்டமாகும்.

உலகின் எந்த இயக்கத்தினுடைய விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத வகையில் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும், அறநெறியையும் பின்பற்றி, போரியல் விதிகளையும், மாண்புகளையும் கடைப்பிடித்து, மரபுப்போர் புரிந்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

போர் முடியும் கடைசித் தருவாயில்கூட, பழிவாங்கும் நோக்கோடு, சிங்கள மக்களை அழிக்க முற்படாது, அவர்களது குடியிருப்புகள் மீது தாக்குதல் நிகழ்த்த முனையாது, இறுதிவரை அறம்சார்ந்து நின்ற வீரமறவர்கள் விடுதலைப்புலிகள்.

சீமான்

சிங்கள ராணுவமானது, தமிழர்களது குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என தமிழ் மக்கள் வாழ்விடங்களின் மீது வான்வழித்தாக்குதல் தொடுத்தது; தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் வீசி, தமிழின மக்களைப் பச்சைப்படுகொலை செய்தது.

பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, தமிழர் நிலங்களை அபகரித்து, தமிழர் தேசத்தை சுடுகாடாக்கி, இனவெறியின் கோரத்தாண்டவத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.

எவ்விதப் போர் நெறிமுறையையும் பின்பற்றாது, இனஅழிப்பு நோக்கில் செய்யப்பட்ட அத்தாக்குதல்களின் மூலம், ஏறக்குறைய 2 இலட்சம் மக்களை மொத்தமாய் கொன்று குவித்தது சிங்கள இனவாத அரசும், அதன் ராணுவமும்.

ஈழப்போர் முடிந்து 15 ஆண்டுகளைக் கடந்தும், தமிழினத்தின் கோர இனப்படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஐ.நா. மன்றமும், சர்வதேச அரங்கும் தமிழர்களுக்கு எவ்விதத் தீர்வையும் பெற்றுத் தர முன்வரவில்லை.

இனப்படுகொலை செய்திட்ட சிங்கள ஆட்சியாளர்கள் மீது தலையீடற்ற பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும், ஈழச்சொந்தங்களிடம் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியுமாக பன்னாட்டு மன்றத்தில் நீதிகேட்டு, தமிழின மக்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை

எம்மினத்துக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை, எம்மினத்தின் இனப்படுகொலையை உலகரங்கில் எடுத்துரைத்து, எமது தரப்பு நியாயங்களை மற்ற தேசிய இனங்களுக்கு மெல்ல மெல்லக் கடத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எம்மினத்தின் மாண்பையும், ஈழச்சொந்தங்களின் வலியையும் இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டுள்ள கிங்டம் திரைப்படத்தை தமிழ் மண்ணில் ஒருபோதும் ஏற்க முடியாது.

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும், மாவீரர் தெய்வங்களான விடுதலைப்புலிகளையும், எம்மினத்தின் வீரம்செறிந்த விடுதலைப்போராட்டத்தையும், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்களையும் கொச்சைப்படுத்தும் எதுவொன்றையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது.

ஆகவே, ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கிங்டம் திரைப்படத்தை தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்வகையில் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் திரையிடுவதை முற்றாக நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், திரையரங்குகளை முற்றுகையிட்டு, அத்திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest