
இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள `சக்தித் திருமகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தற்போது படக்குழுவினர், படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்ப்பதற்கு அடுத்தடுத்து தமிழகத்தின் முக்கியமான திரையரங்குகளுக்கு தியேட்டர் விசிட் அடித்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக கோவை ப்ராட்வே திரையரங்கிற்கு இப்படக்குழுவினர் வந்தனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் ஆண்டனி, “எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகம் சரியாக இல்லை என்றால் இது போன்ற ஒரு படைப்பை படைக்க முடியாது.
இந்தத் திரைப்படம் மத்திய மற்றும் மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாமல் வெளியாகியிருக்காது. மத்திய மாநில அரசு தனக்கு அளித்த ஒத்துழைப்பிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
`ஜென்டில்மேன்’, முதல்வன்’, அமைதிப்படை’ ஆகிய படங்களில் காட்டப்படாத ஒரு பரிமாணத்தில் உண்மைக்கு நெருக்கமாக `சக்தித் திருமகன்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்தத் திரைப்படம் வெளியானதே ஒரு சான்று.
இந்த திரைப்படம் தமிழ்நாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இந்திய அரசை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்றெல்லாம் கிடையாது.
இந்த படத்தில் பேசப்பட்ட பிரச்னைகள் உலகம் முழுவதும் இருப்பதுதான்.” என்றவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பதில் தந்த விஜய் ஆண்டனி, “அனைத்து கட்சியினர்களும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
அடுத்த தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
குப்பை கொட்டிக் கிடக்கும்போது இவர்தான் அள்ள வேண்டும், இவர் அள்ள கூடாது எனத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வருவதால் அனைவர் மீதும் உயரிய கருத்து தான் உள்ளது.” என்றார்.