ShaShi-Tharoor

“இந்தியா ஒரு இறந்த பொருளாதாரம்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதும், அதை ஆமோதிக்கும் வகையில் ராகுல் காந்தி கருத்து கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் ராகுல் காந்தியின் பார்வைக்கு மாறாக ட்ரம்ப் கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்தார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர். ஏற்கெனவே சசி தரூர் மற்றும் காங்கிரஸ் இடையே உரசல் போக்கு தொடர்வதனால் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தியுடன் சசி தரூர்
ராகுல் காந்தியுடன் சசி தரூர்

இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சசி தரூர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

“எங்கள் சொந்தக் கட்சியின் தலைவர் கூறியவற்றில் நான் கமண்ட் செய்ய விரும்பவில்லை. அவர் கூறிய கருத்துக்களுக்கான காரணங்கள் அவரிடம் உள்ளன.” எனக் கூறியுள்ளார் சசி தரூர்.

“அமெரிக்க சந்தையை இழந்துவிடக்கூடாது”

“என்னுடைய கவலை அமெரிக்காவுடனான இலக்குகளை அடைவது மற்றும் பொருளாதார கூட்டுறவைப் பற்றியது. இது இந்தியாவுக்கு முக்கியமானது. நாம் சுமார் 90 பில்லியன் டாலர் வரை சரக்குகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அதை இழக்கும் இடத்தில் நாம் இல்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

சிலர் இது நமது ஜி.டி.பி-யில் வெறும் 2 சதவிகிதம் என்கின்றனர். ஆனால் நம் ஏற்றுமதியைக் கணக்கில் கொள்ளும்போது இது மிகவும் முக்கியமானது. அமெரிக்கா நம்முடைய மிகப் பெரிய சந்தைகளில் ஒன்று.

இந்த ஒட்டுமொத்த கட்டண கேள்விகளையும் கருத்தில்கொண்டால், நாம் இந்தியாவுக்கு சாதகமான ஒப்பந்தம் அமைய பேரம் பேசுபவர்கள் வலிமையாகவும் தைரியமாக இருக்க விரும்ப வேண்டும்.

பேரம் பேசும்போது நாம் ஒன்றை இழப்போம் ஒன்றைப் பெறுவோம். அதில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும். அதே வேளையில் நமது தேசத்தின் சில அடிப்படை விருப்பங்கள் மீறப்படக்கூடாது.

அமெரிக்காவின் சந்தையைத் தக்கவைத்துக்கொள்ளும் நாம், அதே வேளையில் பிற நாடுகளிலும் சந்தையை விரிவுபடுத்த வேண்டும்.

நாம் யு.கேயுடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சு வார்த்தைகள் நல்ல நிலையில் இருக்கின்றன. ஜப்பானுடனான பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் எல்லாவற்றையும் இழக்க முடியாது. சிலவற்றை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இது நாம் நமக்காக பேரம் பேசுபவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய நேரம் என நான் கருதுகிறேன்.” எனப் பேசினார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest