
பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம், முறைகேடான வாக்காளர் பட்டியல், தேர்தலின்போது வாக்குத் திருட்டு என தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. மேலும், தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் வரை போராட்டப் பேரணி நடத்தியது. இந்தப் பேரணியில் கலந்துகொண்ட எம்.பி-கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் ஆணையைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.

எனது சகோதரரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இந்த மோசடியை அம்பலப்படுத்தியிருக்கிறார். இன்று, ராகுல் காந்தி இந்தியா கூட்டணியின் MP-களை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வழிநடத்துகிறார். அவருடன் நாங்களும் கோரிக்கை வைக்கிறோம்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் மெஷினில் பரிசோதிக்கும்படியான முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அரசியல் ரீதியான நீக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த நாசவேலை குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்தியா கூட்டணியின் இந்தப் போராட்டத்தில் தி.மு.க தோளோடு தோள் நிற்கிறது. பா.ஜ.க பட்டப்பகலில் இந்தியாவின் ஜனநாயகத்தைக் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.