
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
முருகதாஸ் இயக்கத்தில் அப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு அவர் வேறு எந்த இயக்குநருடன் இணையவிருக்கிறார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி, அவரை இயக்கவிருக்கும் இயக்குநர்களின் பட்டியலில் பல பெயர்கள் பேசப்பட்டன.
அவற்றில், விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்.கே. நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பேசப்பட்டது. அந்தத் தகவலை தற்போது இயக்குநர் வெங்கட் பிரபுவே பகிர்ந்திருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை, விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த வெங்கட் பிரபு, இந்த இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனை வைத்து தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்கப் போவதாகக் கூறியிருக்கிறார்.
அப்படத்தையும் ‘தலைவன் தலைவி’ படத்தைத் தயாரித்த சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்ற தகவலையும் இங்கு வெங்கட் பிரபு பகிர்ந்திருக்கிறார். சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபுவின் ‘தி கோட்’ திரைப்படத்திலும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.