
சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹிர், சந்து சலீம்குமார், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.
வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் ‘Kumbalangi Nights’ படம் மூலம் பிரபலமான சௌபின் சாஹிர். இப்போது லோகேஷ் இயக்கும் ரஜினியின் ‘கூலி’ படத்திலும் முக்கியக் கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் `மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களான செளபின் சாஹிர் மற்றும் அவரது தந்தை பாபு சாஹிர் மற்றும் சான் ஆண்டனி ஆகியோர் மீது பண மோசடி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
செளபின் சாஹிர், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தைத் தயாரிக்க சிராஜ் ஹமீத் என்பவரிடம் இருந்து சுமார் ரூ.7 கோடியை பெற்றதாகவும், பதிலுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் லாபத்தில் 40% வழங்குவதாகவும் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், படம் வெளியான பின்னர் சௌபின் சாஹிர் அந்த 40% லாபத்தையோ, ரூ.7 கோடி பணத்தையோ கூட திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக சிராஜ் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் போலீசார் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட சௌபின் சாஹிர், அவரது தந்தை பாபு சாஹிர் மற்றும் மற்றொரு தயாரிப்பாளர் சான் ஆண்டனி மூன்று பேரும் புகார் அளித்தவரிடம் பண மோசடியில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றம் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், மூன்று பேரும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் பரவின.

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் சௌபின் சாஹிர், “என்னை யாரும் கைது செய்யவில்லை. இந்த வழக்கில் தேவை ஏற்பட்டால் அழைப்பதாக மட்டும் நிதீமன்றம் தெரிவித்திருக்கிறது. என் மீது பணமோசடி தொடர்பான குற்றச்சாட்டிற்கு விசாரணையின்போதே நான் குற்றம் செய்யவில்லை என்பதற்கான அனைத்து வரவு செலவு, கடனாக வாங்கியப் பணத்தை திருப்பிக் கொடுத்த ஆவணங்கள் எல்லாவற்றையும் உரிய முறையில் சமர்பித்துவிட்டேன். காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. காவல்துறையும், நீதிமன்றமும் என் பக்கமுள்ள நியாயங்களை புரிந்துகொண்டது. அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். விரைவில் நல்ல தீர்ப்பு வரும். நான் கைதாகவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…