
‘பதாய் ஹோ’, ‘பதாய் டு’ உட்படப் பல பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகை ஷீபா சத்தா.
இதைத் தாண்டி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் அம்மா கதாபாத்திரங்களாகவும் இவர் நடித்திருக்கிறார்.
இவர் ‘ரயீஸ்’, ‘ஜீரோ’ ஆகிய திரைப்படங்களில் ஷாருக்கானுக்குத் தாயாக நடித்திருப்பார்.

ஷாருக்கானும் இவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தானாம். சொல்லப்போனால், ஷீபா சத்தாவைவிட ஷாருக்கான்தான் சீனியராம்.
இப்படியான வேறுபாடு இருந்தும் ஷாருக்கானுக்குத் தாயாக நடித்தது பற்றி ஷீபா சத்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், “நான் ‘ஜீரோ’ மற்றும் ‘ரயீஸ்’ படங்களில் ஷாருக்கானின் தாயாக நடித்தேன். ஆனால், அவர் என்னுடைய கல்லூரி சீனியர்.
நான் அவருக்குக் கல்லூரியில் அவருடைய ஜூனியர் என்பதை அவருக்கு நினைவூட்டவும் மறந்துவிட்டேன்.
நான் ரயீஸ் படத்தின் படப்பிடிப்பிற்காக இருக்கும்போது, ஷாருக்கான் டெல்லியில் ஏதோ ஒரு நேர்காணலுக்காகச் சென்றிருந்தார்.
அங்கு அவர் ‘ரயீஸ் படத்தில் என் தாயாக நடிக்கும் ஒரு நடிகை இருக்கிறார். அவர் அற்புதமானவர், கவனியுங்கள்’ எனக் கூறியிருக்கிறார்.

அவருடன் ஒரு காட்சியில்கூட நான் நடிக்காத போதிலும் இதை அவர் நேர்காணலில் சொன்னார்.
வித்தியாசமான மனிதர் அவர். ‘ஜீரோ’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நான் அவரைக் கட்டிப்பிடிக்க வேண்டும்.
ஷாருக்கான் அடி வாங்கிக்கொண்டிருக்கும்போது நான் அவரைக் காப்பாற்றுவதாக அந்தக் காட்சி இருக்கும்.
காட்சிக்கு முன்பு அவர் என்னிடம் வந்து, ‘உங்களை நான் தொட்டு நடிப்பதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கிறதா?’ என்று கேட்டார்.
அவர் மிகவும் அன்பானவர். நான் செட்டுக்கு வருவதற்கு முன்பே என் பெயரை அவர் அறிந்திருந்தார்” எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…