
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடக்குமென அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாநாடு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த ஜூலை 4 ஆம் தேதி தவெகவின் செயற்குழுக் கூட்டம் நடந்திருந்தது. அதில்தான் மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தப்போகிறோம் என விஜய் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜூலை 15 ஆம் தேதி மதுரையின் பாரபத்தியில் மாநாட்டுக்கான பூமி பூஜை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடந்திருந்தது. அன்றே மதுரை மாவட்ட எஸ்.பியிடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநாட்டுக்கு அனுமதிக் கேட்டு மனுவும் கொடுக்கப்பட்டது.
தேதி மாற்றம்?
ஜூலை 15 ஆம் தேதியிலிருந்தே மாநாட்டுக்காக இடத்தை தயார்ப்படுத்தும் வேலைகளையும் தொடங்கியிருந்தனர். ஆனால், காவல்துறை தரப்பில் அனுமதி கொடுக்கப்படாமலேயே இருந்தது. மாநாட்டுக்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் என்னென்ன? சிறப்பு விருந்தினராக யார் யார் வருவார்கள்? போன்ற கேள்விகளை காவல்துறை தவெக தரப்பிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கான விளக்கத்தை ஆனந்த் தரப்பிலிருந்து கொடுத்த பிறகும் அனுமதி வழங்குவதில் தாமதப்படுத்துவதாக குற்றஞ்சாட்டுகின்றனர் பனையூரின் முக்கிய நிர்வாகிகள்.

‘விக்கிரவாண்டி மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதிலும் இப்படித்தான் தாமதப்படுத்தினார்கள். காவல்துறையின் தாமதத்தால் செப்டம்பரில் நடக்க வேண்டிய மாநாடு அக்டோபருக்கு தள்ளிப்போனது. இதோ இப்போது மதுரையிலும் அனுமதி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி மாநாட்டியை முன்கூட்டியே நடத்துமாறு கூறுகிறார்கள்.
தொண்டர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பே தேதியை அறிவித்து வேலையைத் தொடங்கினோம். தேதியை மாற்றுவதின் தொண்டர்களை அயர்ச்சியடைய செய்ய முடியும் என நினைக்கின்றனர். நிச்சயம் அது நடக்காது.’ என்கிறார்கள் பனையூர் தரப்புக்கு நெருக்கமானவர்கள்.
‘ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்திக்காக காவலர்களை முன்பே திட்டமிட்டு முழுமையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவிருப்பதால், 25 ஆம் தேதியும் முழுமையாக பாதுகாப்பு வழங்கமுடியாது. அதனால் 25 ஆம் தேதிக்கு முன்பாக வேறொரு தேதியை தேர்வு செய்யுங்கள் என காவல்துறையினர் அறிவுறுத்துகிறார்கள்.’ என மதுரை தவெக நிர்வாகிகள் சேதி சொல்கின்றனர்.

தேதி மாற்றம் குறித்து பனையூர் தரப்பு இன்னும் இறுதி முடிவை எடுத்ததாக தெரியவில்லை. காவல்துறையை அனுமதி அளிக்கக்கோரி நீதிமன்றத்துக்கு செல்லலாம் என்றும் அல்லது காவல்துறையின் அறிவுறுத்தல்படி, தேதியை மாற்றி ஆகஸ்ட் 21 ஆம் தேதி மாநாட்டை நடத்தலாம் என இரண்டு ஆப்சன்களையும் பனையூர் தரப்பு யோசித்து வருகிறதாம். இன்னும் ஓரிரு நாட்களில் இதுசம்பந்தமான அறிவிப்பும் வெளியாகக்கூடும்.