
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் ராகுல் பாபு. இவர் இரவில் எமர்ஜென்சி பணியில் நியமிக்கப்பட்டு இருந்தார். அந்நேரம் 4 போலீஸார் இரவு 11 மணிக்கு அங்கு வந்தனர்.
அவர்கள் அத்துமீறி அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்து அங்கு பணியிலிருந்த டாக்டர் ராகுலிடம் போலீஸ் சூப்பிரண்டண்ட் பிரிஜேஷ் குமாரின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி போலீஸ் அதிகாரி வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், தான் எமர்ஜென்சி பிரிவில் பணியில் இருப்பதால் தன்னால் வர முடியாது என்று தெரிவித்தார்.
அதோடு அங்கு பணியிலிருந்த பெண் ஊழியர் ஒருவரை அழைத்துச்செல்லும்படி டாக்டர் ராகுல் கேட்டுக்கொண்டார்.
இதனால் கோபமடைந்த போலீஸ் அதிகாரிகள் டாக்டர் ராகுலிடம் கடுமையாகப் பேசி அவரைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து கடத்திச்செல்வது போன்று போலீஸ் அதிகாரியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.

டாக்டர் அவர்களோடு செல்லவேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டார். இது குறித்து டாக்டர் ராகுல் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.
அதோடு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஒ.பி.டி பிரிவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸார் தங்களது மொபைல் போனை பிடுங்கி அத்துமீறி நடந்து கொண்டதாக டாக்டர் ராகுல் குற்றம் சாட்டி இருக்கிறார். இதனால் இரண்டு மணி நேரம் மருத்துவமனை பணிகள் பாதிக்கப்பட்டன. சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் வெளியில் காத்துக்கிடந்தனர்.
இதையடுத்து தலைமை மருத்துவ அதிகாரி பிரிஜேந்திர குமார் தலையிட்டு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதிபடுத்தினார். இது குறித்து டிஜிபிக்கு முறைப்படி புகார் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி பிரிஜேஷ் கூறுகையில், ”எனக்கு இதில் எந்தவித தொடர்பும் கிடையாது. தனியார் டாக்டர் ஒருவரை ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவு பணியில் இருந்த டாக்டரை அழைத்து வந்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
மருத்துவமனையில் நடந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.