
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதை வென்ற விஜய் ஆண்டனி, நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார்.
தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி, தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும் உலா வருகிறார்.

இவரின் 25-வது படமாக உருவான சக்தித் திருமகன், அரசியல் பின்னணியில், த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றி விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஜய் ஆண்டனி, “மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கம், எல்லா கட்சிகாரர்களிடமும் இருக்கிறது.
ஒரு பகுதியில் குப்பை இருக்கிறது என்றால், அதை அவர்தான் எடுக்க வேண்டும், இவர்தான் எடுக்க வேண்டும் என்பதில்லாமல், எல்லா அரசியல்வாதிகளும் செல்கிறார்கள் என்றால் அது நல்லதுதானே.
நாம் ஏன் அவர்களுக்குள் விரோதத்தையும், போட்டியாளராகவும் பார்க்க வேண்டும். ஒருவரை தாழ்த்தியும், உயர்த்தியும் ஏன் பேச வேண்டும்?
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனக் கருதும் அனைத்துக் கட்சிகள் மீதும், எனக்கு உயரிய கருத்துதான் இருக்கிறது. நடிகர் விஜய்யுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடும் நோக்கமெல்லாம் இப்போது இல்லை.

எனக்கு எல்லா கட்சியும் பிடிக்கும். அதனால், நான் எல்லா கட்சியுடனும் இணைந்திடலாமா? அதற்கு ஜனநாயகத்தில் வாய்ப்பிருக்கிறதா? ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும் என்கிறபோது, எல்லோரும் நல்லவர்கள்தானே.
எனவே ஒவ்வொருவரும் நல்லது செய்யும்போது அவர்களை வரவேற்று வாழ்த்துகிறோம். கூட்டம் ஓட்டாக மாறாது என்கிறார்கள் என்றால், அது அவர்களின் கருத்து. என்னை பொறுத்தவரை எல்லா அரசும் நன்றாகவே செயல்படுகிறது” என்றார்.