
‘வீரதீர சூரன்’ படத்திற்குப் பின் மீண்டும் அதிரடியாய் ரெடியாகி விட்டார் விக்ரம். அவரது 63வது படமாக ‘மண்டேலா’ மடோன் அஸ்வினின் படம் டேக் ஆஃப் ஆகும் என்று எதிர்பார்க்கையில் இன்ப அதிர்ச்சியாக, ‘மெய்யழகன்’ பிரேம்குமார் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கடந்த மார்ச் மாத கடைசியில் ‘வீரதீர சூரன்’ வெளியானது. அதன் பிறகு விக்ரமின் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் எதிர்பார்ப்பிற்குள்ளானது. அதில் ‘மாவீரன்’, ‘3பி.ஹெச்.கே’ படங்களைத் தயாரித்த அருண் விஷ்வா தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவித்தனர்.
படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளிலும் தீவிரமாக இறங்கினார் இயக்குநர்.. இந்நிலையில் ஐசரி கணேஷின் தயாரிப்பில் ’96’, ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குநர் பிரேம்குமாருடன், விக்ரம் கைகோர்த்திருக்கிறார்.
இதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்தப் படம் விக்ரமின் 64வது படமாக உருவாகும் என்றும், இதன் படப்பிடிப்புதான் முதலில் தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.

‘மெய்யழகன்’ படத்தில் அடிதடி காட்சிகள் இல்லாமல் உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த பிரேம்குமார், ‘விக்ரம் 64’ல் அதிரடியான கதையைக் கையில் எடுக்கிறார். திடுதிடுப்பான த்ரில்லர் ஜானர்.
‘பிரேமா இப்படி ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார்’ என பிரேம் குமாரைப் பார்த்து புருவம் உயர்த்தக்கூடிய அளவில் இந்த ஸ்கிரிப்ட் இருக்கும் என்கின்றனர். ஏற்கெனவே பிரேம்குமாரிடம் இந்தப் படத்திற்கான கதையைக் கேட்ட தயாரிப்பாளர் வியந்ததுடன், “இந்தக் கதை விக்ரமிற்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். அவருக்குப் பிடித்திருந்தால் அவரை வைத்தே, தொடங்கிவிடலாம்” என்று சொல்லியிருக்கிறார்.
பிரேமும் உடனே விக்ரமிடம் இந்த லைனைச் சொல்லியிருக்கிறார். பிரேமிடமிருந்து இப்படி ஒரு லைனை எதிர்பார்க்காத விக்ரம், ஆச்சரியத்தில் மிரண்டதுடன், ‘வீரதீர சூரன்’ பிறகு இதுதான் சரியானதாக இருக்கும் என நினைத்துவிட்டார். உடனடியாக பிரேமிடம் முழுக்கதையை ரெடி செய்யச் சொல்லிவிட்டார். அதுதான் இந்தப் படம்.

இன்னொரு விஷயம், விக்ரம் படத்திற்கு முன்னர் ’96 பார்ட் 2′ எடுக்கவே விரும்பினார் பிரேம்குமார். அந்தக் கதை ரெடியாகவும் இருக்கிறது. ஆனால், விஜய் சேதுபதியின் கமிட்மெண்ட்களால் இந்தக் கதைக்குள் உடனடியாக வரமுடியவில்லை. ஆகவே, காத்திருக்கும் காலகட்டத்திற்குள் வேறொரு கதையை எடுத்துவிடலாம் என்று எழுதிய கதைதான் ‘விக்ரம் 64’க்கான கதை.
இப்போது நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அனேகமாக அடுத்த மாதம் படப்பிடிப்புக்குக் கிளம்பலாம் என்றும், ஜனவரியில் படத்தைத் திரைக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.
இன்னொரு பக்கம் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளிக்கொண்டு வரவும் ஒரு பக்கம் முயற்சிகள் நடந்து வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…