Vitamin-Tale

எத்தனையோ கதைகளைப் படிச்சிருப்பீங்க. ஒரு வைட்டமினோட கதையைப் படிச்சிருக்கீங்களா..?

இன்னிக்கு ஒரு வைட்டமினோட கதையை சொல்லப் போறோம். அதுவோர் அழகான பிங்க் நிற இளவரசி. இந்தக் கதையை சொன்னவர் சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் பாசுமணி. இனி கதைக்குள்ள போவோமா..?

Vitamin Tale
Vitamin Tale

அந்த அழகான இளவரசியோட பேரு வைட்டமின் பி 12. முழுப்பேர் கோபாலமின். இந்த உலகத்துலேயே மிக அழகான மெட்டல் இந்த கோபாலமின்தாங்க. பிங்க் நிறத்துல மாணிக்கம் மாதிரி அவ்ளோ அழகாக இருக்கும். நம்மளோட ரெண்டு முன்னோர்கள் வைட்டமின் பி 12-ஐ உற்பத்தி பண்றாங்க. ஒண்ணு நட்சத்திரங்கள். இன்னொண்ணு பாக்டீரியாக்கள். நாம நட்சத்திரங்கள் பக்கமா போயிடுவோம்.

ஏதோவொரு காலத்துல சில நட்சத்திரங்கள் உப்பி உடையுறப்போ, வெளிப்பட்ட துகள்கள்லதான் கோபால்ட் அப்படிங்கிற தனிமம் இருந்துச்சு. எப்படி தங்கம் ஒரு குறிப்பிட்ட அளவுதான் மண்ணுல இருக்குதோ, அதே மாதிரி இந்த கோபால்ட்டும் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருக்கும்.

மண்ணுல வளர்ற புல்லுல, தாவரங்கள்ல இந்த கோபால்ட்டும் இருக்கும். ஆடு, மாடு மாதிரி தாவரங்களைச் சாப்பிட்டு உயிர் வாழுற உயிர்கள், அவற்றுல இருக்கிற கோபால்ட்டை எடுத்து கோபாலமினை உற்பத்தி பண்ணும்.

அந்த கால்நடைகளோட பாலையோ அல்லது இறைச்சியையோ அல்லது அதுங்களோட ஈரலையோ நாம சாப்பிடுறது மூலமா நமக்கு கோபாலமின் கிடைக்குது. இந்தளவுக்கு பொக்கிஷமா கிடைக்கிற பி 12- ஐ நம்ம உடம்பு கிரகிக்கப் படுற பாடு இருக்கே… அதுதாங்க ஒரு மிகப்பெரிய த்ரில்லர் கதை.

Vitamin Tale
Vitamin Tale

வைட்டமின் பி 12-ங்கிற இளவரசி நம்ம உணவுல இருக்கிறப்போ, பள்ளிப் பருவத்துல இருக்கிறா. இந்த இளவரசி நம்ம இரைப்பைக்குள்ள போகணும்னா, நம்ம உமிழ்நீர்ல இருக்கிற ‘ஆர் ஃபேக்டர்’ அப்படிங்கிற ஒரு பள்ளிப்பருவத் தோழனோட உதவி வேணும். ஏன் தெரியுமா..?

இரைப்பைங்கிற அமில தொழிற்சாலைக்குள்ள அரைச்ச உணவுகள்ல இருக்கிற வைட்டமின் பி 12 இளவரசி, அதுல இருந்து பிரிஞ்சி தனியா அம்போன்னு நிற்பா. தனியா நிற்கிற பி 12 இளவரசியோட கையை இந்த ‘ஆர் ஃபேக்டர்’-ங்கிற விளையாட்டுத்தோழன் பிடிச்சிக்கிட்டா தான், இளவரசியோட பயணம் தொடரும். இல்லைன்னா, இளவரசியோட வாழ்க்கை அந்த இடத்துலேயே முடிஞ்சிடும்.

இரைப்பைக்குள்ள தன்னோட தோழன் ‘ஆர் ஃபேக்டரோட’ பாதுகாப்புல இருக்கிற பி 12 இளவரசி, கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் கழிச்சி, அவனோடவே சேர்ந்து சிறுகுடலோட ஆரம்ப பகுதிக்கு வருவா. இந்த இடம் பி 12-ஓட கல்லூரிப்பருவம்.

அங்க சிறுகுடலைவிட பல பல கோடிக்கணக்குல பாக்டீரியா வில்லன்கள் இருக்கும். அங்க போயிட்டா பி 12 இளவரசி கதை முடிஞ்சு போச்சி. இங்கதான் ட்விஸ்ட்டே.

இந்த இடத்துல வேற சில ஆபத்துகள் காத்திருக்கும் பி 12 இளவரசிக்கு. கணையத்துல சுரக்கிற நீர் இவளை அழிச்சிடலாம். பித்த நீர் சுரந்து வர்றதால சூழ்நிலை மாறலாம். இந்தப் போராட்டத்துல, தன்னோட பள்ளிப்பருவ தோழனை இழந்து மறுபடியும் தனியா நிற்பா பி 12 இளவரசி.

இந்த நேரத்துல பெஸ்ட்டி ஒருத்தர் வருவார். அவர் பேரு இன்டென்சிவ் ஃபேக்டர். இவரும் ஓர் இன்ட் ரஸ்ட்டிங் கேரக்டர்தான்.

இரைப்பையில இருக்கிற அமிலங்கள் உணவுல இருக்கிற பி 12-ஐ பிரிச்செடுக்கும் இல்லியா..? அதே அமிலங்கள்ல இருந்து உற்பத்தியானவர்தான் இந்த பெஸ்ட்டி.

ஆனா, இரைப்பையில இருக்கிறப்போ பி 12 இளவரசியும், இந்த பெஸ்ட்டியும் ஒருத்தரையொருத்தர் மீட் பண்ணியிருக்க மாட்டாங்க.

சில படங்கள்ல ஹீரோ, ஹீரோயின் பக்கத்து பக்கத்து வீட்லேயே இருப்பாங்க. ஆனா, பாதி படம் வரைக்கும் மீட் பண்ணியிருக்க மாட்டாங்க. அந்த மாதிரி வெச்சுக்கலாம். ஆனா, இவர் பெஸ்ட்டி.

Vitamin Tales
Vitamin Tales

சரி, இரைப்பையில இருந்து சிறுகுடலோட ஆரம்ப பகுதிக்கு இளவரசி வருவான்னு மேலே இருக்கிற பத்தியில சொல்லியிருந்தேன் இல்லியா..? 7 முதல் 8 மீட்டர் நீளம் இருக்கிற சிறுகுடல்ல எக்கச்சக்க சுரப்புகள் நடக்கும்.

கூடவே, ஸ்கேட்டிங் மாதிரி சும்மா சர்ரு சர்ருன்னு ஏகப்பட்ட அலைபாயல்கள் வேற இருக்கும். கூடவே பி 12 இளவரசி கிடைச்சா சாப்பிட்டு ஏப்பம் விடுறதுக்கு கோடிக்கணக்குல வில்லன்கள் வேற இருக்கும்க. எல்லாம் பாக்டீரியாக்கள் தாங்க.

இத்தனை ஆபத்துகள்ல இருந்தும் பி 12 இளவரசியைக் காப்பாத்துறது இந்த பெஸ்ட்டிதான். இப்படியே இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா கையைப் பிடிச்சிக்கிட்டு சிறுகுடலோட கடைசிப்பகுதி வரைக்கும் போவாங்க. இங்க தான் செம்ம க்ளைமேக்ஸ் இருக்கு..!

உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மாதிரியான சத்துகளை தன்னோட ஆரம்ப பகுதியிலேயே சிறுகுடல் எடுத்துக்கும். ஆனா, அழகான, அரிதான இந்த பி 12 இளவரசியை மட்டும் அது கண்டுக்கவே கண்டுக்காது. சிறுகுடலைத் தாண்டி பெருங்குடல்ல பி 12 இளவரசி குதிச்சிட்டா, இதுவரைக்கும் பட்ட கஷ்டம் எல்லாமே வீணா போயிடும்.

ஏன்னா, அதுவோர் உப்புக்கடல். அங்க சிறுகுடலைவிட பல பல கோடிக்கணக்குல பாக்டீரியா வில்லன்கள் இருக்கும். அங்க போயிட்டா பி 12 இளவரசி கதை முடிஞ்சு போச்சி. இங்கதான் ட்விஸ்ட்டே.

சிறுகுடலோ கடைசிப்பகுதியில பி 12-க்காகவே காத்துக்கிட்டிருக்கிற இன்னொரு ரெசப்டார், தன்னோட கதவுகளைத் திறந்து ‘வாங்க இளவரசி. உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தோம்’னு உள்ளே கூப்பிடும்.

தன் பெஸ்ட்டியோட அதுக்குள்ளே நுழையும் பி 12. ஆனா, இளவரசிக்கூட அதுக்கு மேல டிராவல் பண்ற வாய்ப்பு பெஸ்ட்டிக்கு கிடையாது. பெஸ்ட்டியை உடல் அழிச்சிடும்.

அங்க ‘டிரான்ஸ்கோபாலமைன்’ அப்படிங்கிற ஒரு ஹீரோ இருப்பார். அவர்கூட கைகோத்துக்கிட்டு ரத்தத்துல பயணம் பண்ணி, கல்லீரலுக்கு வந்து சேருவாங்க பி 12 இளவரசி. இதுக்கப்புறம் கல்லீரல் இளவரசியை பத்திரமா சேமிச்சு வெச்சுக்கிட்டு, மூளைக்கும், ரத்த செல்களை உற்பத்தி செய்ய எலும்பு மஜ்ஜைக்கும் அனுப்பும்.

ஸோ, நட்சத்திர வெடிப்புல ஆரம்பிச்சு நம்மோட கல்லீரல் வரைக்கும் வந்து சேர பி 12 இத்தனை கஷ்டங்களை சந்திக்குது. அது நமக்கு சத்தா கிடைக்க நம்ம உடம்பு அதைவிட படாத பாடு படுது. இதுதான் பி 12 இளவரசியோட கதை. இந்த இளவரசி இருக்கிற உணவுகளை சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest