
கர்நாடக மின்னணு ஊடகப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, டிவி சேனல்களைப் போலவே யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் இருந்து உரிமம் பெற்றே செயல்பட அனுமதிக்கும் முறையைக் கொண்டுவர கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இதுகுறித்துப் பேசியிருக்கும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா,
“செய்தி சேனல்களைத் தொடங்கவும், செய்திகளை ஒளிபரப்பவும் யூடியூப் சேனல்களுக்கு உரிமங்கள் கட்டாயம் என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கர்நாடக மின்னணு ஊடகப் பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை நாங்கள் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்.”

கருத்துச் சுதந்திரம் முக்கியம். ஆனால் போலியான செய்திகளைப் பரப்பப்படுவதைத் தடுக்க வேண்டும்
ஆதரங்கள் இன்றி யூகத்தின் அடிப்படையில் போலியான செய்திகளைப் பரப்புவதை சில யூடியூப் செய்தி சேனல்கள் செய்து வருகின்றன.
இது நாட்டிற்கும், சமூகத்திற்கும் மிகப்பெரிய கேடுகளைத்தான் தரும். எங்கள் அரசாங்கம் எப்போதும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாகவே உள்ளது. இதற்கு ஆபத்தை விளைவிக்கும் எதையும் நான் ஒருபோதும் செய்ததில்லை, எங்கள் அரசாங்கமும் செய்யாது.
ஆனால் அதேசமயம் போலியான செய்திகளைப் பரப்பப்படுவதைத் தடுக்க வேண்டும். ஆகையில் செய்தி யூடியூப் சேனல்களுக்கு உரிமம் கட்டாயம் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்று பேசியிருக்கிறார்.
யூடியூப் செய்தி சேனல்களுக்கு உரிமம் – பின்னணி என்ன?
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சுநாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.
அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் வந்து செல்லும் கோயில் இது. இந்த தர்மஸ்தலாவில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர், 1995 முதல் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான் புதைத்ததாக காவல்துறையிடம் புகார் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தர்மஸ்தலா கோயில் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இந்தச் சூழலில் தர்மஸ்தலா பற்றியும், அங்கு நடந்த விவகாரம் பற்றியும் யூடியூப் சேனல்கள், சமூக வலைதளங்களில் பல்வேறு அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகின.
இவற்றில் பல வீடியோக்கள், பதிவுகள் போலியானவை, தர்மஸ்தலாவை தவறாக, அவதூறாகச் சித்தரிக்கும் வதந்திகள் என தர்மஸ்தலா கோயில் நிர்வாகியும் பாஜக எம்பியுமான வீரேந்திர ஹெக்கடேவின் குடும்பத்தினர் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
மேலும், 4,140 யூடியூப் வீடியோக்கள், 932 ஃபேஸ்புக் பதிவுகள் மற்றும் தர்மஸ்தலா சர்ச்சை தொடர்பான வீடியோக்கள் உட்பட 8,000க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கக் கோரியும், யூடியூப், சமூக வலைதளங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கில் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் யூடியூப் சேனல்கள், சமூக வலைதளங்கள்தான் இந்த தர்மஸ்தலா விவகாரத்தைப் பெரிதாக்கி, நாடு முழுவதும் அம்பலப்படுத்திவிட்டதாகப் பலரும் குற்றம்சாட்டியிருந்தனர்.
இப்படியான நிலையில்தான் தற்போது கர்நாடக மின்னணு ஊடகப் பத்திரிகையாளர்கள் சங்கம், டிவி சேனல்களைப் போலவே யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் இருந்து உரிமம் பெற்றே செயல்பட அனுமதிக்கும் முறையைக் கொண்டுவர கர்நாடக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs