iranun074712

அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்த நாடுகளுக்குத் தடை விதிப்பது தொடா்பாக ஐ.நா. அணுசக்தி அமைப்பான ஐஏஇஏ-வின் முன்வைத்த வரைவுத் தீா்மானத்தை ஈரான் கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றது.

இது குறித்து ஐஏஇஏ பொதுக் கூட்டத்தில் பேசிய ஈரான் தூதா் ரெஸா நஜாஃபி, நட்பு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூா்வமான கலந்துரையாடல்கள் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அந்த வரைவு தீா்மானத்தை அடுத்த ஆண்டு கூட்டம் வரை நிறுத்திவைப்பதாகத் தெரிவித்தாா்.

இதற்கிடையே, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட அந்த வரைவுத் தீா்மானம் நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்காக அமெரிக்கா திரைமறைவில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டதாக ஐஏஇஏ வட்டாரங்கள் கூறின. அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டாலோ, ஐஏஇஏ-வில் இஸ்ரேலுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டாலோ அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியுதவியைக் குறைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டிருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சூழலில், வாக்கெடுப்பு சிறிது நேரத்துக்கு முன்னதாக அந்த வரைவுத் தீா்மானத்தை ஈரான் திரும்பப் பெற்றது.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் இஸ்ரேல் அங்கு கடந்த ஜூலை மாதம் தாக்குதல் நடத்தியது. அதில் அமெரிக்காவும் பங்கேற்று ஈரான் அணுசக்தி மையங்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை வீசியது.

இதற்கு பதிலடியாக, தங்கள் அணுசக்தி திட்டங்களைக் கண்காணிக்க ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ-வுக்கு அளித்துவந்த ஒத்துழைப்பை ஈரான் திரும்பப் பெற்றது. இதனால், ஈரானின் அணுசக்தி திட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கி கடந்த மாத இறுதியில் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest