MK-Stalin-karur-edi-2

திராவிடக் கொள்கை தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளதாகவும், அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியுள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுகவுக்கு மாற்று, மாற்றம் என்று கூறியவர்கள் எல்லாம் மறைந்துபோனதாகவும், தமிழ்நாட்டை ஒருநாளும் தலைகுனிய விடமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் கோடாங்கிப்பட்டியில் திமுகவின் முப்பெரும் விழா இன்று (செப். 17) பிரமாண்டமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவரை விமர்சித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

”எதிர்க்கட்சித் தலைவருக்கான மாண்பை அறியாதவர் எடப்பாடி பழனிசாமி. திராவிடக் கொள்கை தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அண்ணாயிஸத்தை அமித் ஷாவிடம் அடிமையிஸமாக அவர் மாற்றியுள்ளார்.

தில்லியில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு காரில் போன பழனிசாமியை பார்த்து எல்லோரும் கேட்பது, ‘முழுதாய் நனைந்த பிறகு முக்காடு எதற்கு? காலிலேயே விழுந்தபிறகு முகத்தை மூட கைக்குட்டை எதற்கு?’ என்பதுதான்.

காவிக் கொள்கையால் தமிழ்நாட்டிற்கு ஏராளமான பிரச்னைகள். ஈராயிரம் ஆண்டுகளாக காவிக் கூட்டத்துடன் நாம் போராடி வருகிறோம். இது ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டம் அல்ல; தமிழ்நாட்டுக்கான போராட்டம்.

நாட்டிலேயே முதல்முறையாக ஆட்சியைப் பிடித்த மாநிலக் கட்சி திமுகதான்.

தில்லியின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மத்திய பாஜக அரசை திமுக நேரடியாக எதிர்த்து வருகிறது. அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை. மொத்தத்தில் தமிழ்நாட்டில் பாகவுக்கு இடமில்லை.

பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் உண்மையாக உழைக்கிறோம். இதனால், திரவிட மாடல் 2.0 நிச்சயம் அமையும். திமுகவின் தலைமைத் தொண்டனாக இதனைக் கூறுகிறேன்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

இதையும் படிக்க | கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

TN CM MK Stalin slams Edappadi palanisamy in karur

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest