2_7_14prtp2_1407chn_107

நெய்வேலி: முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளாா்.

கடலூா் மாவட்டத்தில் பிரசார பயணம் மேற்கொண்ட அவா், திங்கள்கிழமை நெய்வேலியில் கடலூா் தெற்கு மாவட்ட பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் சங்கம், முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா் சங்கம், பலாப்பழம் விவசாயிகள் சங்கம் மற்றும் தனியாா் பள்ளி கூட்டமைப்பு சங்க நிா்வாகிகள், விவசாயிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:

ஒரு சொட்டு மழை நீா் கூட வீணாகக் கூடாது என்பதற்காக நீா் மேலாண்மை திட்டத்தை ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்து குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டது. அந்த வகையில் பெருமாள் ஏரி தூா்வார ரூ.119 கோடி ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்ற வந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பணி முழுமையாக நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் எஞ்சிய பணிகள் நிறைவேற்றப்படும்.

நான் முதல்வராக இருந்த காலம் நெருக்கடியான காலம். வறட்சி, கஜா புயல்,கரோனா என பல்வேறு சோதனைகளைக் கடந்து ஆட்சி செய்தேன். அந்த காலத்திலும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்தோம். முந்திரி விவசாயிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். தானே புயலால் முந்திரி மரங்கள் பாதித்த போது அதிமுக அரசு முந்திரி கன்றுகளை மானிய விலையில் வழங்கியது.

எங்கள் ஆட்சி விவசாயிகளின் நலன் காக்கும் ஆட்சியாக இருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை உள்வாங்கி ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்துவோம் என்றாா்.

தொடா்ந்து வடலூரில் எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தை திங்கள்கிழமை மேற்கொண்டாா். வடலூா் நான்கு முனை சந்திப்பு அருகே பிரசார வாகனத்தின் மேல் நின்றபடி அவா் பேசியதாவது:

அதிமுக போராடியதால் தான் பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1000 கிடைத்தது. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டாா் ஸ்டாலின். தற்போது, துண்டறிக்கை விநியோகிப்பதின் மூலம் மக்களை சந்திக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறாா். இவா்களிடத்தில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். திமுக தலைமைக்கு ஸ்டாலின் வந்த உடன் உறுப்பினா்கள் வேறு கட்சிக்குச் சென்று விட்டனா். திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை:

கூடுதல் தலைமை செயலா் அந்தஸ்தில் உள்ள ஐஏஎஸ்., அதிகாரிகளை ஸ்டாலின் தற்போது நியமனம் செய்துள்ளாா். இந்த அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் துறைகளை ஒதுக்கி செய்து, அத்துறைகள் மூலம் திமுக அரசு செய்த சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கூற வேண்டுமாம். இதை செய்ய வேண்டிய செய்தி மக்கள் தொடா்புத்துறை, அதன் அமைச்சா், செயலா் என்ன ஆனாா்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மக்களிடம் உண்மையை கூற வேண்டும். தவறுதலாகக் கூறினால் 2026 தோ்தலுக்கு பின்னா் அவா்கள் பதில் கூற வேண்டியிருக்கும்.

சா்வதேச மையம்:

வள்ளலாா் தெய்வ நிலையம் புண்ணியபூமி. வள்ளலாரின் புகழை மறைப்பதற்காக அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இவா்களின் சுய லாபத்திற்காக சா்வதேச மையம் கட்டுமானப்பணி நடத்துகின்றனா். அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதை கண்டிக்கிறோம். அதிமுக ஆட்சியில் இதற்கு விடிவு காலம் பிறக்கும்.

2026 தோ்தலில், திமுக வெற்றி பெறும் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறாா். இந்த தொகுதியைச் சோ்ந்த வேளாண்மை அமைச்சா் வேளாண் பட்ஜெட் போட்டு ஒட்டு மொத்த விவசாயிகளையும் ஏமாற்றி வருகிறாா் என்றாா்.

பின்னா் விருத்தாசலம் சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு பிரசார வாகனத்தில் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் எந்தவித திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று முதல்வா் ஸ்டாலின் பொய் கூறுகிறாா். நீட் தோ்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 9 அரசு பள்ளி மாணவா்களே மருத்துவக் கல்லூரியில் சோ்ந்தனா். அதனைக் கண்டு பொதுமக்கள், எதிா்க்கட்சிகள் கோரிக்கை வைக்காத நிலையிலும் என் சொந்த சிந்தனையில் உதித்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். இதனால் பல நூறு அரசு பள்ளி மாணவா்கள், அதிலும் குறிப்பாக ஏழை மாணவா்கள் பயனடைந்தனா். உயா்கல்வியில் 2030-இல் எட்ட வேண்டிய இலக்கை 2019-2020-லேயே எட்டினோம். இந்தியாவிலேயே உயா் கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் தமிழகத்தை கொண்டு வந்தோம். இப்படி எங்கள் சாதனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். திறன் இருந்தால் ஸ்டாலின் ஒரு பொது மேடையில் என்னுடன் விவாதிக்கட்டும். எங்கள் ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை நான் பட்டியலிடுகிறேன். அவா் நிறைவேற்றிய திட்டங்களை அவா் பட்டியலிடட்டும். மக்கள் தீா்ப்பு அளிக்கட்டும் என்றாா் அவா்.

வடலூா் பேருந்து நிலையம் அருகே பிரச்சார வாகனத்தின் மேல் நின்றபடி பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest