NV_Thalaiyangam_desktop

பண்டிகைக் காலம் ஆரம்பித்துவிட்டது. அடுத்தடுத்து கொண்டாட்டங்கள்தான். பொதுவாகவே, பண்டிகைகளின்போது, கார், விலை உயர்ந்த மொபைல், வீட்டு உபயோகப் பொருள்கள், தங்க நகைகள் என நீண்டநாள்களாக ஆசைப்பட்ட பொருள்களை வாங்குவது மக்களின் வழக்கம். இந்நிலையில், ஜி.எஸ்.டி குறைப்பும் தற்போது சேர்ந்துகொண்டிருக்கிறது. பல்வேறு நிறுவனங்களும் ‘அதிரடி விலைக் குறைப்பு’ எனக் கவர்ச்சிகரமான ஆஃபர்களை அள்ளிவிட்டபடி உள்ளன.

கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகத் தேவையான பொருள்களைக்கூட வாங்காமல் கைகளைக் கட்டிக்கொண்டவர்கள்; யானை விலை, குதிரை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தவர்களெல்லாம் இப்போது நிம்மதி பெருமூச்சுவிடுகிறார்கள்.அதேசமயம், ‘‘இதன் இன்னொரு பக்கத்தையும் கவனமாகப் பார்க்க வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார்கள், பொருளாதார நிபுணர்கள்.

‘‘சமீபகாலமாகவே நாட்டில் நுகர்வு அதிகரிக்கவில்லை. கார் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் எல்லாம் தேங்கிக் கிடக்கின்றன. நிறுவனங்களின் விற்பனை மற்றும் லாப வளர்ச்சி குறைந்துபோயுள்ளன. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றம் காணாமல் இருக்கிறது என்கிற கவலை, அரசிடமும் தொழில்துறையினரிடமும் படர்ந்திருக்கிறது.

‘புதிய வரி முறையில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை’ என்று பட்ஜெட்டில் அறிவித்தும்கூட நுகர்வு அதிகரிக்கவில்லை. இந்நிலையில்தான், பண்டிகைக் காலத்தைப் பயன்படுத்தி நுகர்வைப் பெருக்கத் திட்டமிட்டு, ஜி.எஸ்.டி குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது. ஆனால், மக்களை மேற்கொண்டு கடனில் தள்ளுவதற்கு வழிவகுத்துவிடும் அபாயம் இதில் உள்ளது என்பதையும் யோசிக்க வேண்டும்’’ என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

காரணம், சமீப ஆண்டுகளாகவே மக்களின் சேமிப்புக் குறைந்து, கடன்கள் அதிகரித்து வருவதையே பார்க்கிறோம். வேலைவாய்ப்பு, வருமானம் எல்லாம் சவாலாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட கடன் வாங்கும் நிலையில்தான் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். அதுவும், கிரெடிட் கார்டு, தனிநபர் கடன், கடன் செயலிகள் மூலமாகக் கடன் வாங்கிச் சிக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மாதம்தோறும் வெளியாகும் கிரெடிட் கார்டு குறித்த புள்ளிவிவரங்களே இதற்குச் சாட்சி. சமீபத்தில் வெளியான, ‘நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வின் (NPCI) புள்ளிவிவரங்கள், மக்களின் பெரும்பாலான பணப்பரிவர்த்தனைகள் கடன்களுக்கான இ.எம்.ஐ, வட்டி ஆகியவற்றுக்காகவே அனுப்பப்பட்டிருக்கின்றன’ என்கிறது.

எப்போதுமே, ‘அத்தியாவசிய தேவை’தான் எதையுமே தீர்மானிக்க வேண்டும். ‘விலை குறைந்திருக்கிறதே’ என்று அவசரப்பட்டு, தேவையே இல்லாமலும், கடனிலும் பொருள்களை வாங்கிக் குவித்தால், ‘விளக்கு வெளிச்சத்தில் சிக்கிக்கொண்டு மடியும் விட்டில் பூச்சிகள்’ கதையாகத்தான் முடியும் என்பதை அனைவருமே உணர்ந்து, உஷாராக வேண்டிய தருணம் இது!

– ஆசிரியர்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest