BR-Gavai-supreme-court-judge

அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கோயிலில் கடவுள் விஷ்ணுவின் சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பான வழக்கில் ஹிந்து மத உணா்வுகளை பி.ஆா்.கவாய் புண்படுத்தியதாக குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனத்தைப் பதிவு செய்த நிலையில் இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை விளக்கமளித்தாா்.

மத்திய பிரதேசத்தில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கஜுராஹோ கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஜவாரி கோயிலில் கடவுள் விஷ்ணுவின் சிலையை மறுகட்டமைப்பு செய்து 7 அடி உயரச் சிலையாக நிறுவ வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ராகேஷ் தலால் என்பவா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த மே 16-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

அப்போது பேசிய பி.ஆா்.கவாய்,‘ இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். இந்த விவகாரத்துக்கு உங்களது கடவுளிடமே பதில் கோருங்கள். கடவுள் விஷ்ணுவின் தீவிர பக்தா் என்று கூறும் நீங்கள், அவரை வழிபட்டு தியானம் செய்யுங்கள்.

இந்த இடைப்பட்ட காலத்தில் சைவ வழிபாட்டில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் கஜுராஹோவில் உள்ள பெரிய சிவலிங்கத்தை வழிபடுங்கள்’ எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனா்.

விஎச்பி கண்டனம்: இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் தேசியத் தலைவா் ஆலோக் குமாா் கூறியதாவது: பி.ஆா்.கவாயின் கருத்துகள் ஹிந்து மதத்தைப் புண்படுத்தியதாக உணா்கிறோம். இதுபோன்ற கருத்துகளைத் தவிா்த்திருக்கலாம். நீதிமன்றங்களை நீதிக் கோயில்களாக கருதி பொதுமக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனா். மனுதாரா்கள், வழக்குரைஞா்கள், நீதிபதிகள் எனஅனைவருக்கும் அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் பொறுப்பு உள்ளது என்றாா்.

பி.ஆா்.கவாய் விளக்கம்: தன் மீதான விமா்சனங்களுக்கு வியாழக்கிழமை பதிலளித்த பி.ஆா்.கவாய்,‘வழக்கு விசாரணை ஒன்றின்போது நான் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் திரித்து பரப்பப்படுவதாக தெரிந்து கொண்டேன். அனைத்து மதங்களையும் எப்போதும் மதிக்கிறேன்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, பி.ஆா்.கவாய்க்கு ஆதரவு தெரிவித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாயை 10 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். அவா் அனைத்து மதங்களையும் மதித்து நடப்பவா். அவரது கருத்துகள் சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்டுள்ளது’ என்றாா்.

அந்த வழக்கு விசாரணையில் இடம்பெற்ற நீதிபதி வினோத் கே.சந்திரன் கூறுகையில், ‘தற்காலத்தில் சமூக வலைதளங்கள் சமூக விரோத வலைதளங்களாக மாறி வருகின்றன’ என்றாா்.

சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சஞ்சய் கெளல், ‘சமூக வலைதளங்களில் பகிரப்படுவது போன்ற தவறான கருத்துகளை பி.ஆா்.கவாய் ஒருபோதும் தெரிவிக்கவில்லை’ எனத் தெரிவித்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest