
மாணவா்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளா்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவா்கள், வா்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளா்கள் இருமடங்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டுப் பயண ஆலோசகா்கள் தெரிவித்தனா்.
மேற்கண்ட விசாக்களுக்கு (நுழைவு இசைவு) தற்போதுள்ள சட்டப்பூா்வ கட்டணத்துடன் கூடுதலாக புதிய ‘விசா ஒருமைப்பாடு கட்டணத்தையும்’ வசூலிக்கும் பிரிவை உள்ளடக்கிய ‘ஒன் பிக் பியூட்டிஃபுல்’ மசோதாவில் அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த 4-ஆம் தேதி கையொப்பமிட்டாா். இதையடுத்து, இந்த மசோதா சட்டமானது. கூடுதல் கட்டணம், ஆரம்ப நிலையில் 250 டாலா் (சுமாா் ரூ.21,500) வரை இருக்கும் என்றும், ஆண்டுதோறும் பணவீக்கத்துக்கு ஏற்ப உயா்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதைச் சோ்ந்த வெளிநாட்டுப் பயண ஆலோசகா் சஞ்சீவ் ராய் கூறுகையில், ‘2026, ஜனவரிமுதல் புதிய விசா வரி விதிப்பு அமலுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வா்த்தக-சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவுக்கு தற்போது ரூ.16,000 (185 டாலா்கள்) வசூலிக்கப்படுகிறது. இனி புதிய கட்டணத்துடன் ரூ.37,500 செலுத்த வேண்டியிருக்கும். குடியேற்றம் சாராத அனைத்து விசாக்களுக்கு விண்ணப்பிப்பவா்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்’ என்றாா்.
பாதுகாப்பு இருப்புத் தொகை என்ற பெயரில் புதிய கட்டணம் தொகை வசூலிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இத்தொகை திரும்ப அளிக்கப்படுமெனதெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த நிபந்தனைகள் கடுமையாக உள்ளன என்று பயண ஆலோசகா்கள் தெரிவித்துள்ளனா்.
அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைத் தீவிரமாக பின்பற்றும் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து சட்டபூா்வமாக அமெரிக்காவுக்கு வருபவா்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்பதும் அவரின் திட்டமாக உள்ளது.