youth

அமெரிக்காவில் புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனத்தின் தலைவரை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்று ஓராண்டுகூட முடியாத நிலையில், அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க்கைச் சுட்டுக் கொன்றிருக்கிறார் 22 வயதேயான இளைஞர் ஒருவர்.

2024 ஜூலை 13 – அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்பை தாமஸ் மாத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞர் சுட்டிருக்கிறார் – ஆனால், ஒரு காதைத் துப்பாக்கிக் குண்டு உரசிச் சென்ற நிலையில், நூலிழையில் டிரம்ப் உயிர் தப்பிவிட்டார். ஜஸ்ட் மிஸ். தாமஸ் க்ரூக்ஸின் வயது 20! (மேற்கூரையில் மறைந்திருந்து சுட்டதாகக் கூறப்படும் க்ரூக்ஸை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் சுட்டுக்கொன்றுவிட்டனர்).

2024 டிச. 4 – நியூ யார்க்கில் மன்ஹாட்டனிலுள்ள ஒரு ஹோட்டலின் வாசலில் யுனைடெட் ஹெல்த்கேர் என்ற புகழ்பெற்ற அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான பிரையன் தாம்சனை லூயிஜி மஞ்ஜானி என்ற இளைஞர் சுட்டுக்கொன்றார்; வயது 26!

2025 செப். 10 – யூட்டா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களிடையே பேசிக்கொண்டிருந்த அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க்கை டைலர் ராபின்சன் என்ற இளைஞர் சுட்டுக்கொன்றார். வயது 22!

இந்த மூன்று சம்பவங்களுமே ஏதோ ஒரு புள்ளியில் இணைகின்றன. மூன்றிலுமே சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு வயது 20-களில். மூவருமே முன்னெப்போதும் தவறான, குற்றம் குறை கூறுகிற வகையில் செயல்பட்டவர்கள் அல்லர். கடந்த காலம் சிறப்பானதாகவே இருந்திருக்கிறது.

பிரையன் தாம்சனைச் சுட்டுக்கொன்ற லூயிஜி மஞ்ஜானி, ஐந்து நாள்களுக்குப் பின் பென்சில்வேனியாவில் மெக்டொனால்ட் விற்பனையகம் ஒன்றில், ஊழியர் ஒருவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

நன்றாகத் திட்டமிட்டு, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கச் சென்றபோது, ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்து, ஹோட்டல் வாசலில் தாம்சனை லூயிஜி சுட்டுக்கொன்றிருக்கிறார்.

முதுகெலும்பு – தண்டுவடப் பிரச்சினைக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட லூயிஜி மஞ்ஜானி, இதற்கான பணத்தைப் பெறக் காப்பீட்டு நிறுவனங்களுடன் போராடி ஏற்பட்ட கோபமும் வெறுப்பும்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.

அமெரிக்காவில் மருத்துவத் துறையைப் பொருத்தவரை மக்களின் நிலைமை படுமோசம். மருத்துவம், மருத்துவமனை வசதி, சிகிச்சை போன்றவை எல்லாருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியன அல்ல. செலவு அதிகம். எல்லாமே காப்பீடு இருந்தால் மட்டும்தான். காப்பீட்டு நிறுவனங்கள் யாவும் தனியார் துறையிடம் இருக்கின்றன. லாபம் சம்பாதிக்க வேண்டும், அவ்வளவுதான் நோக்கம். காப்பீட்டுத் தொகையைப் பெறுவது எளிதல்ல.

கடும் கோபத்திலும் ஆத்திரத்திலும் வெறுப்பிலும் இருக்கும் வெகுமக்கள், தங்கள்   கோபத்தின், இயலாமையின், ஆத்திரத்தின் வெளிப்பாடாக பிரையன் தாம்சன் கொலையைப் பார்த்ததால் லூயிஜி மஞ்ஜானியைக் கொண்டாடத் தொடங்கினர். சமூக ஊடகங்களில் பரவலாக விவாதித்தனர். மஞ்ஜானியைக் காப்பாற்ற வழக்குச் செலவுக்காக நிதி திரட்டினர். எக்ஸ் தளத்தில் அவரைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை லட்சங்களில் அதிகரித்தது. மக்கள் அவர் பக்கம் நின்று, லட்சக்கணக்கில் ஆதரவாகத் திரண்டனர்.

காலங்காலமாகத் தங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற காப்பீட்டு நிறுவனங்களைத் தட்டிக் (சுட்டுக்) கேட்ட லூயிஜி மஞ்ஜானியைத் தங்களுடைய ஹீரோ போலக் கண்டனர் அமெரிக்க மக்கள்.

இந்தக் கொலையை நியாயப்படுத்தக் கூடாது; மக்கள் இவ்வாறு கொலையாளிக்கு ஆதரவாகத் திரளக் கூடாது என்றெல்லாம் பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாப்பிரோ போன்றோர் அதிர்ச்சி தெரிவித்தாலும், மக்களைப் பொருத்தவரையில்  கொஞ்சமும் கவலைப்படவில்லை.

முதலாளித்துவத்துக்கு எதிரான தாக்குதலை மேற்கொண்டவராகப் பேசப்பட்ட லூயிஜி மஞ்ஜானி, உள்ளபடியே, பால்டிமோரிலுள்ள புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். பென்சில்வேனியாவிலுள்ள ஐவி லீக் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றவர். ஆலோசகராக, மென்பொறியாளராகப் பணிபுரிந்தவரும்கூட.

மஞ்ஜானி இதற்கு முன் எவ்விதக் குற்றச் செயலிலும் ஈடுபட்டதாகப் பதிவுகள் இல்லை. கவலைப்படும் விதத்திலோ அல்லது தீவிரமாகவோ அவர் எதுவும் சொன்னதில்லை என்றும் மஞ்ஜானியின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் தெரிவித்தனர். முற்றிலும் அவர் இயல்பான ஆள் என்றார் வகுப்புத் தோழர் ஒருவர். தெளிவாகச் சிந்திக்கிற நபர் என்றார் முன்னாள் அறைத் தோழர்.

மஞ்ஜானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்க முடியும். அல்லாமல், இடை விடுதலை (பரோல்) எதுவுமின்றியே அதிகபட்சமாக வாழ்நாள் முழுவதுமே சிறையில் கழிக்க வேண்டியும் நேரிடலாம்.

கொலை முயற்சியில் தப்பி பின்னர் தேர்தலிலும் வென்று அதிபராகவும் டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுவிட்ட நிலையில், இதுவரையிலும் இந்தக் கொலை முயற்சிக்கான தாமஸ் க்ரூக்ஸின் நோக்கம் கண்டறியப்படவில்லை.

க்ரூக்ஸின் தந்தையும் தாயும் ஆற்றுப்படுத்துநர்களாகப் பணிபுரிந்தவர்கள். க்ரூக்ஸ், சிறப்பாகப் படித்து நட்சத்திர விருது வென்றவர். கல்லூரி நுழைவுத் தேர்வில் 1600-க்கு 1530 மதிப்பெண்கள் பெற்றவர். மிகவும் அமைதியானவர் என்றுதான் உடன் படித்தவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். டிரம்ப்பைச்  சுட்டுக்கொல்ல முயன்று சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இரு மாதங்களுக்கு முன்னர்தான் பட்டப் படிப்பை முடித்தார்.

ஐம்பது துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் ஏணியொன்றை வாங்கிக் கொண்டு முக்கியமான வேலை இருப்பதாகவும் மறுநாள் திரும்பிவிடுவேன் என்றும் கூறி விடுப்பு எடுத்துக்கொண்டு சம்பவம் செய்ய வந்த க்ரூக்ஸ், எட்டு குண்டுகளைச் சுட்டார். ஒன்று மட்டும் டிரம்ப்பின் காதை உரசிச் சென்றது. சிலர் காயமுற்றனர். ஒருவர் உயிரிழந்தார்.

க்ரூக்ஸின் அரசியல் பார்வை பற்றி யாருக்கும் தெரியவில்லை. இந்தக் கொலை முயற்சியானது அரசியல் நோக்கம் கொண்டதா என உறுதி செய்ய முடியவில்லை. பொதுவெளியில் அவருடைய கருத்துகள் பற்றித் தெரிந்துகொள்ளக் கூடிய எதுவும் இல்லை.

சார்லி கிர்க்கைச் சுட்டுக்கொன்ற டைலர் ராபின்சனும் மிகவும் கூச்ச சுபாவமுள்ள, புத்திசாலியான, விடியோ விளையாட்டுகள், சித்திரக் கதைப் புத்தகங்கள் மற்றும் நடப்பு விஷயங்களில் ஆர்வமுள்ளவர். பள்ளியில் சிறப்பாகப் படித்து உதவித் தொகை பெற்றவர்.  

பெற்றோர் இருவருமே குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இருவரிடமே வேட்டைத் துப்பாக்கிக்கான உரிமம் வைத்திருக்கின்றனர். ராபின்சன், அவருடைய இரு தம்பிகளுடன் துப்பாக்கியேந்தி போஸ் கொடுத்த படங்களை சமூக ஊடகங்களில் குடும்பத்தினர் பகிர்ந்திருக்கின்றனர்.

நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கிர்க்கை இவர் கொன்றிருப்பார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை

செயின்ட் ஜார்ஜிலுள்ள டிக்ஸி தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் பயிற்சித் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவன் ராபின்சன் என்று அந்தக் கல்லூரி அறிவித்திருக்கிறது.

மிகச் சிறப்பாகப் பேசுவார், மிகத் திறமையாக நடந்துகொள்வார், எப்படியும் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரானால் வியப்பதற்கில்லை என்று நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், திவீர வலதுசாரியான சார்லி கிர்க்கைக் கொன்ற குற்றச்சாட்டில் சிறைப்பட்டிருக்கிறார். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை உறுதி எனக் கூறப்படுகிறது.

பிரையன் தாம்சன் சுட்டுக்கொல்லப்பட்டபோது, கொலை என்பது குற்றச் செயல் எனத் தெரிந்தே, நாடு முழுவதும் பெருமெடுப்பில் லூயிஜி மஞ்ஜானியைக் கொண்டாடியது. சமூக ஊடகங்களில் மஞ்ஜானியை ஆதரித்தும் காப்பீட்டு நிறுவனங்களை விமர்சித்தும் கருத்துகள் பரவின. இந்தக் கொலை வழக்கில்  விசாரணை இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது.

தீவிர வலதுசாரியும் டிரம்ப்பின் பிரசாரகருமான சார்லி கிர்க்கின் படுகொலைச் செய்தி உள்ளபடியே அமெரிக்காவை அதிரச் செய்தது. ஏனெனில், எதிராளிகளை ஒழித்துக்கட்ட வலதுசாரிகளுக்கு இது வலுவான காரணமாக அமைந்துவிட்டிருக்கும். நல்லவேளையாக, அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்றாகிவிட்டதால் பலரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

பெண்கள் எல்லாவகையிலும் தங்கள் கணவர்களுக்கு உரியவர்கள், கட்டுப்பட்டவர்கள்; திருநர்களும் தன்பாலின ஈர்ப்பாளர்களும் சபிக்கப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட போதிலும் பெண்கள், அந்தக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்… இவையெல்லாமும் கிர்க்கின் நிலைப்பாடுகள்! இன்னும் இதேபோல, வலதுசாரிகளேகூட வெளிப்படையாகத்   தெரிவிக்க முன்வராத பல விஷயங்கள்.

(இதனிடையே, ராபின்சனின் அறை நண்பர்களில் ஒருவர் திருநங்கையாக  மாறிவருவதாகவும் அவருடன்தான் வசித்து வந்ததாகவும் ஒரு செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது).

பிரையன் தாம்சன் கொலைக் காலத்தில் நடந்ததைப் போல அல்லாமல், சார்லி கிர்க் படுகொலை விஷயத்தில் – ஆதரவோ, எதிர்ப்போ –  விவாதங்களும் விமர்சனங்களும் கருத்துப் பகிர்வுகளும் அமெரிக்காவில் சமூக ஊடகங்களில் முற்றிலுமாக முடக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. தாம்சன் கொல்லப்பட்டபோது பிரபலமான இணைய தளங்களில் நடந்ததைப் போன்ற விவாதங்களோ, கருத்துப் பகிர்வுகளோ எதுவும் நடைபெறவில்லை.

சார்லி கிர்க் படுகொலை தொடர்பாக, சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்த எண்ணற்றோர் அவரவர் பணிபுரியும் நிறுவனங்களால் வேலையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் புகழ்பெற்ற எம்எஸ்என்பிசி செய்தி சேனலின் அரசியல் ஆய்வாளர் மாத்யூ டவுட்டும் ஒருவர். கொலைச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் டவுட் தெரிவித்த கருத்து, வெறுப்பு நடவடிக்கைகளைத் தூண்டக் கூடிய வெறுப்புப் பேச்சு என்று தெரிவித்த எம்எஸ்என்பிசி நிறுவனத்தினர், டவுட்டின் கருத்துகள் பொருத்தமற்றவை என்று கூறி மன்னிப்பும் கேட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் இப்போது சமூக ஊடகச் செயல்பாடுகளைக் கொண்டும் ஊழியர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டங்களும்  ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. எனவே, சார்லி கிர்க் தொடர்பாக எவ்விதக் கருத்துப் பகிர்வுகளும் இல்லை!

இன்னும் ஒரு படி மேலே சென்று, சார்லி கிர்க் கொலையைக் கொண்டாடும்    வெளிநாட்டவர்களின் விசா அனுமதி ரத்து செய்யப்படும்; அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவித்திருக்கிறார் (கிர்க்கைச் சுட்டுக்கொன்றதாக டைலர் ராபின்சன்  கைது செய்யப்பட்ட செய்தியையே புலனாய்வு அமைப்புகள் அறிவிக்கும் முன்னரே அதிபர் டிரம்ப்தான் அறிவித்தார், அந்த அளவு நெருக்கம்!).

நல்லவேளை, சார்லி கிர்க் கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ள டைலர் ராபின்சன், ஜனநாயகக் கட்சி ஆதரவாளரும் அல்ல, திருநரும் அல்ல, புலம்பெயர்ந்து வந்தவரும் அல்ல, இடதுசாரியும் அல்ல. அமெரிக்காவிலேயே பிறந்த வெள்ளையர் என்பதுடன் குடியரசுக் கட்சி ஆதரவாளர்களான பெற்றோரின் மகனான கிறிஸ்துவர்! ஆக, சார்லி கிர்க் படுகொலையைத் தொடர்ந்து நேரிட்டிருக்கக் கூடிய மிகப் பெரிய ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறது அமெரிக்கா!

ஆனால் ஒன்று, அரசியல்ரீதியாகச் சிந்திக்காதவர்களாக இருந்தாலும் அரசு முதலான அமைப்புகளுக்கும், அவற்றின் முகங்களாக அறியப்படுவோருக்கும் எதிரான தனிநபர்களின் – குறிப்பாக இளைஞர்களின் – சீற்றமும் கோபமும் ஆத்திரமும் எங்கெங்கோ நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது – எச்சரித்தபடி!

About youth in America who try to resolve their anger through gunfire…

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest