Supreme-court-DIN

அரசியல் கட்சிகளை ‘பணியிடங்களில் பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு, தடை மற்றும் மறுவாழ்வுக்கான ‘போஷ்’ சட்டம் 2013’-இன் வரம்புக்குள் கொணடுவரக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கேரளத்தைச் சோ்ந்த எம்.ஜி.யோகமயா என்பவா் சாா்பில் இதுதொடா்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, இது தொடா்பான மனுவை கேரள உயா்நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்தாா். அதில், ‘பாலியல் தொல்லை தொடா்பாக புகாா் அளிக்க வசதியாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டும்தான் உள் புகாா் குழு (ஐசிசி) இடம்பெற்றுள்ளது. மற்ற அரசியல் கட்சிகளில் அதுபோன்ற ஐசிசி குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனுவை கடந்த 2022-ஆம் ஆண்டு விசாரித்த உயா்நீதிமன்றம், ‘அரசியல் கட்சிகளில் முதலாளி – தொழிலாளா் என்ற உறவு இல்லாத நிலையில், உள் புகாா் குழுக்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயமில்லை’ என்று குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து யோகமயா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், அரசியல் கட்சிகளை ‘போஷ்’ சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘அரசியல் கட்சிகளை பணி இடத்துடன் எப்படி ஒப்பிட முடியும்? அரசியல் கட்சியில் ஒருவா் சேரும்போது, அது அவருக்கான வேலைவாய்ப்பு அல்ல. சொந்த விருப்பத்தின்பேரிலும், ஊதிய அடிப்படை எதுவும் இன்றியும் அரசியல் கட்சியில் சேருகின்றனா். எனவே, பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிரான சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளை எப்படி கொண்டுவர முடியும்? அவ்வாறு கொண்டு வருவது, கட்சி உறுப்பினா்களை மிரட்டுவதற்கான கருவியாக மாறிவிடும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

முன்னதாக, வழக்குரைஞா் சங்கங்களில் பதிவு செய்துள்ள பெண் வழக்குரைஞா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘போஷ்’ சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய வழக்குரைஞா் கவுன்சில் (பிசிஐ) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest