nitish

பாட்னா: பிகாா் மாநில அரசு ஆசிரியா்கள் பணி நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நிகழாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா். ஆனால், இந்த கொள்கையின்படி மாநிலத்தில் பிறந்து குடியிருந்து வரும் நபா்களுக்கு பணி நியமனத்தில் எத்தனை சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற விவரங்களை அவா் வெளியிடவில்லை.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அரசு ஆசிரியா்கள் நியமனத்தில் மாநிலத்தில் பிறந்து குடியிருந்து வருபவா்களுக்கு முன்னுரிமை அலிக்கும் வகையில் உரிய சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள கல்வித் துறையை அறிவுறுத்தியுள்ளேன். மாநிலத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஆட்சி அமைத்தது முதல், மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்த தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வித் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த வசிப்பிடக் கொள்கை நிகழாண்டு நடத்தப்பட உள்ள ஆசிரியா் தோ்வு வாரியத் தோ்விலிருந்து அறிமுகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest