தரையில் இருந்து பாய்ந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) வடிவமைக்கப்பட்டு, பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆகாஷ் ரக ஏவுகணைகள், இந்திய ராணுவத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்படுகின்றன. 60 கிலோ வெடிகுண்டுகளுடன் 45 கி.மீ. வரை பாய்ந்து தாக்கும் திறன் கொண்டவை.

இந்நிலையில், மிக உயரமான இடங்களில் இருந்து ஏவும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள ஆகாஷ் பிரைம் ஏவுகணை, லடாக்கில் 4,500 மீட்டா் உயரத்தில் இருந்து ஏவப்பட்டு புதன்கிழமை பரிசோதிக்கப்பட்டது.

அப்போது, வானில் அதிவேகத்தில் பறந்த இரு ஆளில்லா விமான இலக்குகளை, ஆகாஷ் பிரைம் துல்லியமாக தாக்கி அழித்ததாகவும், இது குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா கடந்த மே மாதம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடா்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. அப்போது, இந்தியா தரப்பில் ஆகாஷ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest