
விந்தணுக்களின் எண்ணிக்கைபற்றி, அதன் ஆரோக்கியம்பற்றி எல்லோருக்கும் நிறைய தகவல்கள் தெரிந்திருக்கும். ஆனால், அதை தாங்கியிருக்கும் விந்துப்பைகள்பற்றி எத்தனைபேருக்கு தெளிவாக தெரியும் என்பது சந்தேகமே… இன்றைக்கு விந்துப்பைப் பற்றியும், ஆண்கள் ஏன் விந்துப்பையை தொட்டுப்பார்க்க வேண்டும் என்பதுபற்றியும் விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் டாக்டர் காமராஜ்.

”விந்துப்பைகளின் அளவு மிக மிக முக்கியம். ஓர் ஆண் குழந்தைப் பிறக்கும்போது விந்துப்பைகள் ஒரு பாதாம் விதை அளவுக்கு இருக்கும். பிறகு, பிள்ளை பிள்ளை வளர விந்துப்பையும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஒரு வளர்ந்த ஆணுடைய விந்துப்பையில் இருக்கிற விந்தகங்களின் உயரம் 2.5-ல் இருந்து 3 செ.மீ வரைக்கும் இருக்கும். அகலவாக்கில் அதன் சுற்றளவு 2 முதல் 3 செ.மீ இருக்கும். விந்துப்பையின் அளவுபற்றி இந்தக் கட்டுரையின் கீழேயுள்ள வீடியோவிலும் விளக்கியிருக்கிறேன். அதையும் பார்த்தால், விந்துப்பை அளவுபற்றி உங்களுக்குத் தெளிவாக புரியும்.
நான் குறிப்பிட்ட அளவைவிட விந்துப்பை சிறியதாக இருந்தால், விந்தணுக்கள் குறைவாக இருக்கலாம். அல்லது விந்தணுக்கள் இல்லாமல் இருக்கலாம்” என்றவர், எந்தெந்த நிலைகளில் விந்துப்பை சிறியதாக இருக்கலாம், விந்தணுக்கள் இல்லாமல் போகலாம் என்பனவற்றைப்பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
”நம் ஊரில் புட்டாலம்மை என்கிற ‘பொன்னுக்கு வீங்கி’ (mumps) அம்மை, சிறுவயதில் பலருக்கும் வந்திருக்கும். இந்த அம்மை வந்தால், வீட்டில் வேப்பிலையை சொருகிவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுவனின் கழுத்தில் தங்கச்சங்கிலியைப் போட்டு விடுவார்கள். அது தவறு. உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடமோ அல்லது பாலியல் மருத்துவரிடமோ அழைத்து சென்று அந்த அம்மைக்கான சிகிச்சைகளை உடனே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால், மம்ப்ஸுக்கு காரணமான வைரஸ், தாடையை தாக்கிவிட்டு, அடுத்து விந்துப்பையை தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இப்படித் தாக்கினால், விந்தணுக்களை உற்பத்தி செய்யவிருக்கிற எல்லா செல்களையும் அழிந்துவிடும். சில ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை பூஜ்யம் என்று வருவதற்கு முக்கியமானக் காரணம் இந்த மம்ப்ஸ் வைரஸ்தான்.

அடுத்து இறுக்கமான உள்ளாடை போடுவது, இறுக்கமான ஜீன்ஸ் அணிவது, மடி மீது லேப்டாப் வைத்து வேலை செய்வது, செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பது, பால்வினை நோய்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு விளையாடும்போது விந்துப்பையில் அடிபட்டு அது சுருங்கி காணாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.
தவிர, விந்துப்பைப்பற்றிய இன்னொரு முக்கியமான விஷயம். விந்துப்பை கேன்சர் வயதானவர்களுக்கு வராது, 15 வயது முதல் 35 வயது வரையிலான சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும்தான் வரும். அதனால், பெண்களுக்கு எப்படி மார்பக பரிசோதனை அவசியமோ, அதேபோல 15-35 வயது ஆண்களுக்கு விந்துப்பை பரிசோதனை அவசியம். விந்துப்பையைத் தொட்டுப்பார்த்தால், விந்தகங்கள் கரடுமுரடாக இல்லாமல் ஸ்மூத்தாக இருக்க வேண்டும். இரும்பைத்தொடுவதுபோல விந்துப்பை (கல் மாதிரி) இருந்தால், கேன்சராக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறாது. ரொம்ப சாஃப்டாக, ஸ்பான்ஜை தொடுவதுபோல இருந்தால், விந்துப்பை முழுமையாக வளர்ச்சியடையவில்லை என்று அர்த்தம். விந்துப்பை தொடர்பான பிரச்னைகள் வருமுன் தடுக்க, ஆண்கள் விந்துப்பையை தொட்டுப்பார்க்க கூச்சப்படக்கூடாது” என்கிறார் டாக்டர் காமராஜ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…