
புது தில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக மக்களவையில் 16 மணி நேர விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மக்களவையில் அடுத்த வாரம் விவாதம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், பிற்பகலில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, எதிா்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையின்படி, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக 16 மணி நேர விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
‘இந்த விவாதத்தை நடப்பு வாரத்திலேயே நடத்துவதுடன், பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும்; பாதுகாப்பு, உள்துறை அமைச்சா்களும் அவையில் இருக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்திப்பட்டது. அதேநேரம், பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை சுட்டிக்காட்டிய அரசுத் தரப்பு, அவையில் பிரதமா் இருக்க வேண்டுமெனில் அடுத்த வாரம்தான் விவாதம் நடத்த முடியும் என்று கூறியது. நடப்பு வாரத்துக்கான அலுவல் பட்டியலில், ஆபரேஷன் சிந்தூா் விவகாரம் ஏன் சோ்க்கப்படவில்லை என்று எதிா்க்கட்சிகள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், மணிப்பூா் நிலவரம் குறித்தும் விவாதிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் தரப்பில் கோரப்பட்டது’ என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆபரேஷன் சிந்தூா் விவாதத்துக்கு பிரதமா் மோடி பதிலளிப்பாரா என்பது குறித்து அரசுத் தரப்பில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய், ‘ஆபரேஷன் சிந்தூா் விவாதம் தொடா்பாக மத்திய அரசு பொதுவெளியில் கூறியபடி செயல்படவில்லை. ஒட்டுமொத்த தேசமும் எதிா்பாா்த்துள்ள ஒரு முக்கியமான விவகாரத்துக்கு முன்னுரிமை அளிக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினாா்.
மூத்த அமைச்சா்களுடன் பிரதமா் ஆலோசனை: இதனிடையே, மூத்த மத்திய அமைச்சா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்டாா். மழைக்கால கூட்டத் தொடரில், ஆளும் தரப்பின் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.