
மும்பையில் சமீபத்தில் கூகுள் காட்டிய வழியைப் பின் பற்றிச் சென்ற ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கடலுக்குள் விழுந்து உயிரிழந்தனர். பெண் காரில் சென்று நேரடியாகச் சென்று கடலுக்குள் விழுந்தார். மற்றொரு நபர் பைகிள் சென்று கடலுக்குள் விழுந்துவிட்டார். மும்பையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆப்பிள் வாட்ச் மூலம் உயிர் தப்பி இருக்கிறார்.
மும்பையில் உள்ள இ காமர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் க்ஷிதிஜ் ஜோடபே. இவர் நீச்சல் அடிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவர். அவர் கடலில் ஆழமான பகுதி வரை சென்று நீச்சலடிப்பது வழக்கம்.

கடந்த 2020ம் ஆண்டிலிருந்து நீச்சல் அடிக்கும் ஜோடபே பாண்டிச்சேரி அருகில் உள்ள கடலில் நீச்சலடிக்கச் சென்றார். அவர் ஆக்ஜிசன் சிலிண்டர் மற்றும் இதர பாதுகாப்பு சாதனங்களின் துணையோடு கடலுக்குள் குதித்தார்.
அவர் கடலில் 36 மீட்டர் ஆழத்திலிருந்தபோது அவரது இடுப்பிலிருந்த வெயிட் பெல்ட் லூஸானது. இதனால் அவர் வேகமாக மேல் நோக்கித் தள்ளப்பட்டார். அவரது கையில் கட்டப்பட்டு இருந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா திடீரெனச் செங்குத்தாக மேல் நோக்கி ஏறுவதை உணர்த்தியது. உடனடியாக அதன் திரையில் எச்சரிக்கை செய்யத்தொடங்கியது.
வேகமாக மேல் செல்லும் பட்சத்தில் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் மேலே செல்லும் வேகத்தைக் குறைக்குமாறு ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை செய்தது.
ஆனால் மேலே செல்லும் வேகத்தை ஜோடபேயால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஆப்பிள் வாட்ச் அபாய ஒலியை எழுப்பத் தொடங்கியது. அந்த அபாய ஒலியைத் தொடர்ந்து மேலே இருந்த அவரது பயிற்சியாளர் உடனடியாக அவருக்கு உதவ கடலுக்குள் சென்றார்.
எடை பெல்ட் அவிழ்ந்து இருந்ததால் ஜோடபே 10 மீட்டர் அளவுக்கு மேல் நோக்கி வந்திருந்தார். தொடர்ந்து மேலே வந்து கொண்டிருந்தார். அந்நேரம் மேலே இருந்து சென்ற அவரது பயிற்சியாளர் ஜோடபேவிற்குத் தேவையான உதவிகள் செய்தார். இதனால் அவர் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்.
ஆபத்திலிருந்து தப்பியது குறித்து ஜோடபே கூறுகையில், ”கடிகாரத்தில் இப்படி ஒரு அம்சம் இருப்பது எனக்குத் தெரியாது. நான் உண்மை நிலையை உணரும் முன்பே, என் கடிகாரம் எனக்கு எச்சரிக்கை காட்டத் தொடங்கியது.
நான் அந்த எச்சரிக்கையைப் புறக்கணித்தபோது, அது முழு அளவில் ஒலிக்கத் தொடங்கியது. உடனே என் பயிற்றுவிப்பாளர் வந்து எனக்கு உதவி செய்தார்” என்று அவர் கூறினார்.

இது குறித்து ஆப்பிள் வாட்ச் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு தனது அனுபவத்தை ஜோடபே எழுதி இருந்தார். அதற்கு டிம் கும் அளித்திருந்த பதிலில், ”உங்கள் பயிற்சியாளர் அலாரம் சத்தத்தைக் கேட்டு விரைவாக அவர் உங்களுக்கு உதவியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா, ஒரு கரடுமுரடான, சாகசத்திற்குத் தயாரான சாதனமாகக் கருதப்படுகிறது. அவசரக் கால ஒலி எழுப்புதல் உட்படப் பல பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது. இக்கடிகாரத்தில் இருக்கும் அலாரம் 180 மீட்டர் தூரம் வரை கேட்கக்கூடியது. அதிக சத்தத்துடன் இரண்டு வகையான ஒலிகளை மாறி, மாறி வெளியிடுகிறது.