indW

சில சமயம், பார்த்துப் பழகிய ஒருவரின் கையெழுத்து சட்டென மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? எழுத்து அதேதான்.

ஆனால், அதை எழுதிய வேகத்திலும், வளைவுகளிலும், பேனாவை அழுத்திய விதத்திலும் ஒரு புதிய தீர்மானமும், தன்னம்பிக்கையும் தெரியும்.

இந்த முறை இங்கிலாந்துக்குச் இந்திய மகளிர் அணியின் ஆட்டம் அப்படித்தான் இருந்தது. பார்த்துப் பழகிய அதே நீலச் சட்டை. ஆனால், அந்த ஆட்டத்தின் கையெழுத்து முற்றிலும் புதியது.

இந்திய மகளிர் அணி - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்
இந்திய மகளிர் அணி – கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்

வரலாற்றுப் பின்னணி: இந்தியா vs இங்கிலாந்து

இந்த சரித்திர வெற்றியைக் கொண்டாடுவதற்கு முன், இதன் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கு முன், இங்கிலாந்துடன் மோதிய 35 டி20 போட்டிகளில் இந்தியா ஜெயித்தது வெறும் 11.

குறிப்பாக, இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் நிலை இன்னும் சவால். 2010-2022 வரை, இங்கிலாந்தில் நடந்த 12 போட்டிகளில் இந்தியா வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது.

இங்கிலாந்து மண்ணில் இந்திய மகளிர் அணி ஒரு டி20 தொடரை கூட வென்றிருக்கவில்லை.

65% வெற்றி விகிதம் கொண்ட இங்கிலாந்து சொந்த மண்ணில் ஒரு அசைக்க முடியாத சக்தி. ஆனால், கோட்டைகள் தகர்க்கப்படவே கட்டப்படுகின்றன.

முதல் ஆட்டம்: நாக் அவுட் பஞ்ச் (ஜூன் 28)

ஒரு படத்தின் முதல் காட்சியே அதிரடியாக அமைந்துவிட்டால், ரசிகர்கள் சீட் நுனிக்கு வந்துவிடுவார்கள் அல்லவா?

நாட்டிங்ஹாமில் நடந்தது அதுதான். அங்கே இந்திய அணி நிகழ்த்தியது ஒரு நாக்-அவுட் மேட்ச்!

கேப்டன் ஹர்மன்பிரீத் இல்லை. தற்காலிக கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் முகத்தில் ஒரு துளி பதற்றமும் இல்லை.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்ததிலேயே ஸ்மிருதி மந்தனாவின் தன்னம்பிக்கை தெரிந்தது.

முதலில் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனாவும், ஷஃபாலி வர்மாவும் முதல் ஓவரிலிருந்தே அதிரடியில் இறங்கினார்கள்.

ஸ்மிருதியிடம் பதற்றத்தின் சாயல் துளியும் இல்லை. ஒரு தேர்ந்த சிற்பி, தேவையற்ற பகுதிகளை உளி கொண்டு செதுக்கி எறிவது போல, ஃபீல்டர்களுக்கு இடையே இருந்த சின்னச்சின்ன இடைவெளிகளைக் கூடத் துல்லியமாகக் கணக்கிட்டு பவுண்டரிகளை விரட்டி, வெறும் 62 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார்.

ஸ்மிரிதி மந்தனா
ஸ்மிரிதி மந்தனா

அதுவரை 31 அரை சதங்கள் அடித்திருந்த அவருக்கு, அன்றுதான் முதல் டி20 சதம் என்றாலும், 180.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன், ஒரு இந்திய வீராங்கனையின் அதிகபட்ச டி20 ஸ்கோராகவும் பதிவானது.

விளைவு, இந்தியாவின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் 210/5 என்ற இமயத்தை எட்டியது. இந்த ஸ்கோரைப் பார்த்ததுமே இங்கிலாந்து அணி மனதளவில் உடைந்து போனது.

ஆட்டத்தின் மற்றொரு ஹைலைட், அறிமுக வீராங்கனை ஸ்ரீ சரணியின் பந்துவீச்சு.

4 ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை சரித்தார்.

இதனால், இங்கிலாந்து 113 ரன்களில் சுருண்டது 97 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த இந்த ராட்சச வெற்றி, சமூக வலைதளங்களில் ஒரு மாபெரும் புயலைக் கிளப்பியது.

பலரும் ‘இது புதிய இந்தியாவின் உதயம்’ என்று எழுதினார்கள். ஆனால், ஒரு பூ மலர்வதால் மட்டுமே அது வசந்தகாலம் ஆகிவிடாது.

இரண்டாம் ஆட்டம்: சரிவிலிருந்து மீண்ட சிங்கம் (ஜூலை 1)

முதல் வெற்றியின் போதை சில சமயம் தலைக்கு ஏறும். பிரிஸ்டலில் அதுதான் நடந்தது.

31 ரன்களில் ஸ்மிருதி, ஷஃபாலி, Comeback கொடுத்த கேப்டன் ஹர்மன்பிரீத் என முக்கியமான மூன்று விக்கெட்டுகள் சரிந்தபோது, ‘சரி, பழைய கதை ஆரம்பித்துவிட்டது’ என்றே தோன்றியது.

அப்போதுதான், ஜெமிமா ரோட்ரிகஸும், அமஞ்சோத் கரும் ஜோடி சேர்ந்தார்கள்.

100 ரன்களை எட்டும் வரை அவர்கள் ஆடிய விதம், 100 அடி உயரச்சிலையின் சரிவை தாங்கிப்பிடித்த பாகுபலியின் பலம்.

ஜெமிமா ரோட்ரிகஸ்
ஜெமிமா ரோட்ரிகஸ்

முதலில் சரிவைத் தடுத்து, பிறகு மெதுவாக ரன் ரேட் எனும் இதயத் துடிப்பை சீராக்கி, இறுதிக் கட்டத்தில் அதிரடியில் இறங்கி, இந்திய அணியை 181/4 என்ற ஒரு கௌரவமான ஸ்கோருக்குக் கொண்டு சென்றனர்.

அடுத்து பந்து வீசிய இந்தியாவின் மத்திம ஓவர்களில்தான், போட்டியின் திசையையே மாறியது.

தீப்தி ஷர்மாவும், ஸ்ரீ சரணியும் பந்து வீசுகையில், இங்கிலாந்தின் ரன் ரேட் மெதுவாகக் குறையத் தொடங்கியது.

அவர்களின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்டர்கள் ரன் எடுக்கத் திணறியது, கண்ணைக் கட்டிவிட்டு ஓடச் சொன்னது போல இருந்தது.

இறுதியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றபோது, முதல் வெற்றியை விட இந்த வெற்றிதான் அதிக தன்னம்பிக்கையைக் கொடுத்தது. காரணம், இது சரிவிலிருந்து மீண்டு வந்த வெற்றி!

மூன்றாம் ஆட்டம்: கையில் வெண்ணெய், வாயில் மண் (ஜூலை 4)

தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகள், கோப்பை கிட்டத்தட்ட கையில். இன்னும் ஒரே ஒரு வெற்றி போதும்.

இந்த மிதப்பு ஒரு ஆபத்தான மனநிலை. லண்டன் ஓவல் மைதானத்தில் அது நிரூபணமானது.

இங்கிலாந்து 172 ரன்கள் எடுத்தபோதும், இந்தியாவின் தொடக்கம் அமர்க்களமாக இருந்தது.

ஷஃபாலி வர்மா பவர்பிளேவில் பந்துகளைப் பதம் பார்க்க, வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி

கடைசி சில ஓவர்கள் வரை ஆட்டம் நம் பக்கம்தான் இருந்தது. ஆனால், கிரிக்கெட்டில், மொத்தக் கதையையும் மாற்ற ஒரு சின்னத் தவறு போதும்.

தேவையில்லாத ஒரு ஷாட், ஒரு ரன்-அவுட் மிஸ் என ஒவ்வொரு சின்னச்சின்னப் பிழைகளை, தனது சவப்பெட்டிக்கு ஆணியாக இந்தியா அடித்துக்கொண்டது.

கையில் இருந்த வெற்றியை 5 ரன்கள் வித்தியாசத்தில் (166/5) கோட்டை விட்டது.

வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்து வைக்கும் ஒரு ‘ஃபினிஷர்’ இல்லாத குறை, அன்று அப்பட்டமாகத் தெரிந்தது.

சில சமயம் தோல்விகூட நல்லதுதான். அது நம் கால்களை மீண்டும் தரையில் ஊன்ற வைக்கும்.

நான்காவது ஆட்டம்: நிகழ்ந்தது அதிசயம் (ஜூலை 9)

எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த நாள் மான்செஸ்டரில் விடிந்தது. திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்க்கு இணையான நெருக்கடி. வென்றால் சரித்திரம். தோற்றால் தொடர் சமனாகி, கடைசிப் போட்டி வாழ்வா சாவா கதையாகிவிடும்.

ஒருவேளை, அதிலும் தோற்றால் வெறும் கையுடனும் இந்தியர்களின் சாபத்துடனும் வீட்டிற்குச் செல்ல வேண்டியதுதான்.

என்ன செய்வது? பதற்றம் அவர்களின் மூச்சுக்காற்றில் கலந்திருந்தது. ஆனால், இந்த முறை இந்திய அணி முந்தைய தவறுகளிலிருந்து பாடம் கற்றிருந்தது.

பந்துவீச்சாளர்கள், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கச்சிதத்துடன் இங்கிலாந்தின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினார்கள்.

ராதா யாதவ்
ராதா யாதவ்

ராதா யாதவின் நான்கு ஓவர் சுழற்பந்து (15/2), எதிரணியின் ரன் ரேட் எனும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. ரிசல்ட்? 126 ரன்கள் என்ற எளிய இலக்கு.

எளிய இலக்கு என சுலபமாகத் தெரிந்தாலும், அதை துரத்தும் போது அடிக்கடி சொதப்புவது நம் வழக்கம்.

தொடக்க விக்கெட்டுகள் விழுந்தபோது மீண்டும் அதே பயம் தொற்றிக்கொண்டது.

ஆனால், இந்த முறை மிடில் ஆர்டர் பேட்டர்கள், ஒரு அனுபவமிக்க மாலுமியைப் போல, அணியின் கப்பலை நிதானமாக நகர்த்தினர்.

ஷஃபாலி வர்மாவின் அதிரடியும் (18 பந்துகளில் 30), மிடில் ஆர்டரின் பொறுப்பான ஆட்டமும் சேர்ந்து இந்தியாவை 18வது ஓவரிலேயே வெற்றித் துறைமுகத்திற்குக் கொண்டு சேர்த்தனர்.

6 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தையும், 3-1 என தொடரையும் கைப்பற்றி, இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக ஒரு டி20 தொடரை வென்று, புதிய சரித்திரத்தைப் படைத்தது இந்தியா!

ஐந்தாம் ஆட்டம்: ஆறுதலும், எச்சரிக்கையும்

தொடரை வென்ற திருப்தியில் இந்தியாவுக்கு இது ஒரு சம்பிரதாய ஆட்டம். ஆனால், இந்தியா நிகழ்த்தியது ஒரு அபத்த நாடகம்.

Guest Role இல் வரும் நடிகர்களைப்போல, இந்திய வீரர்கள் களத்திற்கு வருவதும், பெவிலியனுக்கு திரும்புவதுமாக இருக்க, ஷஃபாலி வர்மா மட்டும் “One woman Army”யாகப் போராடி 41 பந்துகளில் 75 ரன்கள் விளாசி இந்திய அணியை 167/7 ரன்கள் என்ற ஸ்கோருக்குக்கு கொண்டு வந்தார்.

இதில் வென்றால் எதுவும் மாறப்போவதில்லை என்றாலும், தங்கள் சொந்த மண்ணில் (பிர்மிங்ஹாம் மைதானம்) தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய ஒரு வெறி அவர்களின் ஆட்டத்தில் தெரிந்தது.

அடுத்து இந்தியாவின் பந்துவீச்சு, ஒரு நகைச்சுவைத் திரைப்படம் போல இருந்தது. இந்தியாவின் பந்துவீச்சு இதில் துளியும் எடுபடவில்லை பவர்பிளேவில் ஒரு விக்கெட்டைக்கூட எடுக்க முடியாமல் 57 ரன்களை வாரி வழங்கியது.

ஃபீல்டிங்கில் குழப்பங்கள். போதாக்குறைக்கு கேட்ச்கள் வேறு தவறவிடப்பட்டன.

ஷஃபாலி வர்மா
ஷஃபாலி வர்மா

இதனால், இங்கிலாந்தின் தொடக்க வீராங்கனைகள் சோஃபியாவும் டேனியும், முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் வரை நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து, அவர்களின் வெற்றிக்கு வலுவான அடித்தளமிட்டனர்.

பின்னர், அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தாலும், மூன்றாவதாக களமிறங்கிய போவ்மாண்ட் மட்டும் உறுதியாக நின்றார். கடைசி ஓவரில் 6 பந்துக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலைக்கு இங்கிலாந்து வந்தது. ஒரு சிக்ஸர் அடித்தால் மொத்த ஆட்டமும் க்ளோஸ்.

ஆனால், அருந்ததி ரெட்டி வீசிய முதல் பந்தில் போவ்மாண்ட் (30) போல்ட் ஆனதில் சிறிய நம்பிக்கை பிறந்தது. 4 பந்துகளுக்கு 5 ரன்கள் தேவை எனும் நிலையில், ஜோன்ஸ் அடித்த பவுண்டரிக்கு செல்லும் பந்தை பாய்ந்து பிடித்து இன்னும் கொஞ்சம் நம்பிக்கையூட்டினார் ராதா யாதவ்.

அவசரத்தில் கை விட்டால் அண்டாவில் கூட கைவிட முடியாது என்று சொல்வார்கள்.

அதுபோலவே, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி எனும் நிலையில், இங்கிலாந்து டொக்கு வைத்து விட்டு ஓட, பதற்றத்தில் பக்கத்தில் இருந்த ஸ்டம்புக்கு ஸ்ம்ரிதி மந்தனா வீசிய பந்து ஸ்டம்பை தொடாமல் குறிதவறியதில், வெற்றியின் விளிம்பில் சென்று ஆட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பை ஆசை காட்டி மோசம் செய்தது.

ஆட்டத்தை இழந்தாலும் 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டி-20 கோப்பையினை இந்தியா வென்றது.

புதிய நட்சத்திரம்: ஸ்ரீ சரணி

இந்தத் தொடரின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு, சந்தேகத்திற்கு இடமின்றி அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணிதான்.

முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து பேட்டிங் வரிசையின் முதுகெலும்பை ஒடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

WPL போன்ற தொடர்கள், இது போன்ற திறமையான கிராமப்புற வைரங்களை அடையாளம் காட்டுகின்றன என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்.

ஸ்ரீ சரணி
ஸ்ரீ சரணி

இதில், சில விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன:

* இந்தியாவின் மிகப்பெரிய பலம், அதன் சுழற்பந்து வீச்சு மற்றும் டாப் ஆர்டர் பேட்டிங்கின் அதிரடி. தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ஸ்ரீ சரணி கூட்டணி, ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு, இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்கள்.

பேட்டிங்கில், முதல் ஆறு ஓவர்களில் அதிரடி காட்டுவதும், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைப்பதும் அவர்களது முக்கியத் தந்திரமாக இருந்தது.

ஆனால், கடைசி வரை நின்று ஆட்டத்தை முடிக்க ஒரு ஆள் வேண்டாமா இதுதான் நாம யோசிக்க வேண்டிய முக்கியமான கேள்வி.

* இரு அணிகளுமே தவறுகளுக்கு விதிவிலக்கல்ல. இங்கிலாந்தின் பீல்டிங்கும் பல இடங்களில் மிகவும் மோசமானதாக இருந்தது. முக்கியமான கேட்ச்களைத் தவறவிட்டது. இந்தியாவின் சில பேட்டர்கள், முக்கியமான நேரத்தில் தேவையில்லாத ஷாட்களை ஆடி, விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

இந்திய மகளிர் அணி - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்
இந்திய மகளிர் அணி – கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்

* இங்கிலாந்து, தங்கள் சொந்த மண்ணில் தடுமாறியதற்குக் காரணம், அவர்களது பேட்டிங்கில் இருந்த நிதானமின்மையும், இந்திய சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தெரியாமல் திணறியதும் தான்.

நாளை (ஜூலை 16) தொடங்கும் ஒருநாள் தொடர், முற்றிலும் வித்தியாசமான ஒரு சவால். அங்கே, அதிரடி மட்டும் போதாது. பொறுமையும் தேவை.

இந்தத் தோல்விகளால் துவண்டு விடாமல், புதிய உத்வேகத்துடன் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணுகும்.

முடிவாக, கோப்பையை வென்ற இந்தியாவின் வெற்றி எனும் இந்தப் புதிய கையெழுத்து, டி20 தொடரின் பக்கங்களில் அழகாகப் பதியப்பட்டிருக்கிறது.

ஆனால், கிரிக்கெட் என்ற நீண்ட புத்தகத்தில் இன்னும் பல பக்கங்கள் இருக்கின்றன.

இந்தப் புதிய கையெழுத்து, அந்தப் புத்தகத்தின் எல்லா பக்கங்களையும் நிரப்புமா, அல்லது இந்த ஒரு அத்தியாயத்துடன் நின்றுவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதுவரை, இந்த வரலாற்று வெற்றியை நாம் கொண்டாடுவோம்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest