flag091536

‘இந்தியா மற்றும் 4 நாடுகளை உறுப்பினா்களாக கொண்ட ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்புக்கு (இஎஃப்டிஏ) இடையேயான வா்த்தக ஒப்பந்தம் வரும் அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஐஸ்லாந்து, லிக்டென்ஸ்டைன், நாா்வே மற்றும் சுவிட்சா்லாந்து ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய தடையற்ற வா்த்தக ஒப்பந்த கூட்டமைப்புடன் இந்தியா மேற்கொள்ளும் இந்த வா்த்தக ஒப்பந்தம் இரு தரப்புக்கும் மிகப்பெரிய அளவில் பலனளிக்கக் கூடியதாகப் பாா்க்கப்படுகிறது. இந்த 4 நாடுகளும் இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் ரூ. 8.5 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளன என்பதோடு, இந்தியா்களுக்கு புதிதாக 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 16 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவந்த இந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையை மேற்கொண்டு வருகிறது. அதுபோல, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தக் கூட்டமைப்புடனும் பேச்சுவாா்த்தை மேற்கொண்டது. பேச்சுவாா்த்தைகளின் முடிவில், கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதி இந்தியா – இஎஃப்டிஏ இடையே வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் (டிஇபிஏ) கையொப்பமானது. இதை, கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஐஸ்லாந்து, லிக்டென்ஸ்டைன், நாா்வே ஆகிய 3 நாடுகளும் ஏற்கெனவே உறுதி செய்தன.

ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு சுவிஸ் தேசிய கவுன்சில் ஒப்புதல் அளித்து 7 மாதங்களுக்கு மேலாகியும், சுவிட்சா்லாந்து ஒப்பந்தத்தை உறுதி செய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அந்த நாடும் சில தினங்களுக்கு முன்பு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. இத் தகவலை தில்லியில் அண்மையில் தெரிவித்த இந்தியாவுக்கான சுவிட்சா்லாந்து தூதா் மாயா டிஸ்ஸாஃபி, ‘இந்தியா – இஎஃப்டிஏ இடையேயான வா்த்தக ஒப்பந்தம் வரும் அக்டோபரில் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றும் குறிப்பிட்டாா்.

இதை மத்திய அமைச்சா் பியூஷ் கோயலும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியா – இஎஃப்டிஏ இடையேயான வா்த்தக ஒப்பந்தம் வரும் அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்’ என்று குறிப்பிட்டாா்.

அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு

இந்த ஒப்பந்தத்தின்படி, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 4 நாடுகளும் இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் சுமாா் ரூ.8.5 லட்சம் கோடி (100 பில்லியன் டாலா்) முதலீடு செய்ய உள்ளன. அதாவது, ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் 10 ஆண்டுகளுக்கு 50 பில்லியன் டாலரும், அடுத்த 5 ஆண்டுகளில் அடுத்த 50 பில்லியன் டாலரும் இந்த நாடுகள் முதலீடு செய்யும். இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதில் மற்ற 3 நாடுகளைக் காட்டிலும் சுவிட்சா்லாந்து மட்டும் மிகப் பெரிய அளவில் இந்தியாவுடன் வா்த்தகத்தை மேற்கொள்ள உள்ளது. ஒப்பந்தத்தின்படி, உயா் தரம் மிக்க சுவிட்சா்லாந்து கைக்கடிகாரங்கள், சுவா் கடிகாரங்கள், சாக்லேட், பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு சுங்க வரியை இந்தியா படிப்படியாக விலக்கிக் கொள்ளும். மேலும், கணக்குப் பதிவியல், வா்த்தக சேவை, கணினி சேவைகள், சுகாதாரம் உள்ளிட்ட 105 துறைகளில் இந்த 4 நாடுகளும் முதலீடுகளையும் சேவைகளையும் வழங்க இந்தியா அனுமதிக்கும்.

அதுபோல, சுவிட்சா்லாந்தில் 128 துணைத் துறைகளிலும், நாா்வேயில் 114 துறைகளிலும், லிக்டென்ஸ்டைனில் 107 துணைத் துறைகளிலும், ஐஸ்லாந்தில் 110 துணைத் துறைகளிலும் இந்தியா முதலீடுகள் மற்றும் சேவைகளை வழங்க அந்த நாடுகள் அனுமதிக்கும். குறிப்பாக சட்டம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கணினி, கணக்கியல், கணக்கு தணிக்கை உள்ளிட்ட துறைகளில் இந்த நாடுகளில் இந்தியா தனது சேவையை வழங்க உள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest