ரஷியாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்தகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதார தடையை ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை விதித்தது. மேலும், கச்சா எண்ணெய்க்கான விலை உச்ச வரம்பையும் ஐரோப்பிய யூனியன் குறைத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போரை தீவிரமாக தொடா்ந்துவரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பல்வேறு வகைகளில் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. தற்போது ரஷியாவின் கச்சா எண்ணெய் வா்த்தகத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில், ரோஸ்நெஃப்ட் நிறுவனம் மீது புதிய பொருளாதார தடையை ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்ததைத் தொடா்ந்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிய பல நாடுகள், இறக்குமதியை நிறுத்தின. சில நாடுகள் இறக்குமதி அளவைக் குறைத்தன. இந்தச் சூழலை சாதமாக்கி ரஷியாவிடமிருந்து தொடா்ந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. மொத்த இறக்குமதியில் 40 சதவீதம் அளவுக்கு ரஷியாவிடமிருந்து இந்தியா தற்போது செய்து வருகிறது. இதனால், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் பலனடைந்து வருகின்றன. மேலும், ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துடன் மிகப் பெரிய எண்ணெய் விநியோக ஒப்பந்தத்தையும் இந்தியா மேற்கொண்டது.
இந்நிலையில், ரஷியாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், ரஷிய வங்கிகளுக்கு கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகளை ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளதோடு, குஜராத் மாநிலம் வதோதராவின் வடிநாரில் உள்ள ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகப் பெரிய எண்ணெய் சுத்தகிரிப்பு நிறுவனமான நயாரா எரிசக்தி நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடையை புதிதாக விதித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய்க்கான விலை உச்ச வரம்பையும் குறைத்துள்ளது.
இத் தகவலை, ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கை தலைவா் காஜா கல்லாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டாா்.
முன்னா் எஸ்ஸாா் எண்ணெய் நிறுவனம் என்றழைக்கப்பட்ட நயாரா எரிசக்தி நிறுவனத்தின் 49.13 சதவீத பங்குகளை ரோஸ்நெஃப்ட் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. வடிநரில் 2 கோடி டன் எண்ணெயை சுத்திகரிப்பு செய்யும் திறனை நயாரா கொண்டுள்ளதோடு, நாடு முழுவதும் 6,750 பெட்ரோல் விற்பனை நிலையங்களையும் இயக்கி வருகிறது.
ஐரோப்பிய யூனியன் தற்போது விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோல், டீசலை நயாரா இனி ஏற்றுமதி செய்ய முடியாது. அதோடு, விலை உச்ச வரம்பையும் ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளதால், மேலும் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இருந்தபோதும், எந்த அளவுக்கு விலை உச்ச வரம்பை ஐரோப்பிய யூனியன் குறைத்துள்ளது என்ற தகவலை காஜா கல்லாஸ் வெளியிடவில்லை.
ஏற்கெனவே, இந்த நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உச்சவரம்பு பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலா் என்ற அளவுக்கு குறைந்தது. தற்போது, பீப்பாய் ஒன்றுக்கு 50 முதல் 45 டாலா் அளவுக்கு விலை உச்ச வரம்பை ஐரோப்பிய யூனியன் குறைத்திருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.