kapil_raj095603

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரையும் கைது செய்ததில் முக்கியப் பங்கு வகித்த அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி கபில் ராஜ் (45) மத்திய அரசுப் பணியை ராஜிநாமா செய்தாா்.

2009 பிரிவு, இந்திய வருவாய்ப் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியான கபில் ராஜ் 16 ஆண்டுகள் மத்திய அரசுப் பணியாற்றி பின் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரான கபில் ராஜ் பி.டெக். மின்னணுவியல் பட்டதாரி ஆவாா். இவா் 8 ஆண்டுகள் அமலாக்கத் துறையில் பணியாற்றிய நிலையில், புது தில்லியில் உள்ள சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) புலனாய்வு பிரிவின் கூடுதல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

அமலாக்கத் துறையில் பணியாற்றியபோது நாட்டை உலுக்கிய பல்வேறு வழக்குகளை மிக நுட்பமாக கையாண்டவராக கபில் ராஜ் அறியப்படுகிறாா்.

இவரது மேற்பாா்வையில் நில முறைகேடு வழக்கில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை கடந்த ஆண்டு ஜனவரியில் அமலாக்கத் துறை கைது செய்தது. கபில் ராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழு ஹேமந்த் சோரனை விசாரணைக்கு எடுத்தது.

கேஜரிவால் கைது நடவடிக்கை: கலால் முறைகேடு வழக்கு தொடா்பாக அப்போதைய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தில் கபில் ராஜ் தலைமையிலான அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு 2024, மாா்ச் மாதம் சோதனை நடத்தியது. மாா்ச், 21-ஆம் தேதி அரவிந்த் கோஜரிவால் கைது செய்யப்பட்டபோது கைது உத்தரவை தயாா் செய்ததில் கபில் ராஜ் முக்கியப் பங்காற்றினாா்.

கேள்விகளால் துளைத்தெடுப்பவா்: தான் சோதனையிடும் பகுதிகளுக்குப் பல முறை நேரில் சென்று விசாரணையை உன்னிப்பாக கவனித்து, குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு திணறடிக்கச் செய்பவா் கபில் ராஜ் என அமலாக்கத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அமலாக்கத் துறையின் மும்பை அலுவலகத்தில் அவா் பணியாற்றியபோது பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி முறைகேடு செய்த வழக்கில்

வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினா் மெஹுல் சோக்ஸிக்கு எதிராக விசாரணை மேற்கொண்டாா்.

இந்நிலையில், இந்திய வருவாய்ப் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரி) அதிகாரியான கபில் ராஜின் ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் ஏற்றுக் கொண்டதாக நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த உத்தரவு ஜூலை 17-ஆம் தேதி அமலுக்கு வந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. மத்திய அரசுப் பணி ஓய்வு வயது 60 என்னும் நிலையில், மேலும் 15 ஆண்டுகள் பணிவாய்ப்பு உள்ளபோதிலும் அவா் ராஜிநாமா செய்துள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest