
உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படுவது குறித்து மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று(ஆக. 18) நள்ளிரவில் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்க, உக்ரைன், ஐரோப்பிய தலைவர்கள் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.
யார் யார் பங்கேற்கிறார்கள்?
வெள்ளை மாளிகையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் முதலில் இருதரப்பு ஆலோசனையில் பங்கேற்கிறார் உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி. இந்தச் சந்திப்பு ஆக. 18 இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது.
சுமார் 1 மணி நேரம் வரை நீடிக்கும் இந்த ஆலோசனைக்குப்பின், பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் பிரைடுரிச் மெர்ஸ், பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுலா வோன் டெர் லெயென், நேட்டோ கூட்டமைப்பின் தலைவர் மார்க் ரூட் ஆகியோரை டிரம்ப் வரவேற்று அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த ஆலோசனை தொடங்குகிறது.

பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஸெலென்ஸ்கி – டிரப்பு இடையிலான பேச்சுவார்த்தை படுதோல்வியில் முடிந்தது. இதன் எதிரொலியாக, சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவை இந்தப் பேச்சுவார்த்தை பாதிக்கவும் தவறவில்லை.
இதைக் கருத்திற்கொண்டு, உக்ரைன் – ரஷியா இடையிலான மோதல் போக்கு விவகாரத்தில் இம்முறை சுமூக முடிவு எட்டப்படுவதை உறுதிசெய்ய உக்ரைன், அமெரிக்க அதிபர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷிய அதிபர் புதின், கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பிராந்தியத்தை ரஷியாவின் முழு கட்டுபட்டுக்குள் கொண்டுவர தீர்க்கமாக இருக்கிறார். ஆனால், உக்ரைனுக்கு அதில் துளியளவும் உடன்பாடில்லை.
அமெரிக்காவின் அலாஸ்காவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் ரஷிய அதிபா் புதினுடன் டிரம்ப் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், அந்தப் பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நானே முடித்து வைத்தேன் என்று திரும்பத்திரும்ப சூளுரைக்கும் டிரம்ப், அடுத்தக்கட்டமாக, உக்ரைன் – ரஷியா இடையிலான போர்நிறுத்தத்துக்காகவும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
புதினுடனான பேச்சுவார்த்தைக்குப்பின் எட்டப்பட்ட கருத்துகளைக் கருத்திற்கொண்டு உக்ரைனை தமது நிலைப்பாட்டிலிருந்து இறங்கச்செய்ய டிரம்ப் கட்டாயம் வலியுறுத்துவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், சண்டை நிறுத்தத்துக்கான தெளிவான வரைபடத்துடன் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய தலைவர்கள் டிரம்ப்பை சந்தித்து பேசினால், சவால்களைக் கடந்து அடுத்தக்கட்டமாக, உக்ரைன் – அமெரிக்கா- ரஷியா இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு இன்றைய சந்திப்பு இட்டுச் செல்லும் என்றும் ஐரோப்பிய, நேட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.