
உதய்பூர் ஃபைல்ஸ் படத் தயாரிப்பாளருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2022-இல் நிகழ்ந்த கன்னையா கொலை வழக்கை மையப்படுத்தி படமாக்கப்பட்டுள்ள ‘உதய்ப்பூர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளரான அமித் ஜானிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று ஒரு தரப்பால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாஜக தீவிர ஆதரவாளரான நுபுர் ஷர்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் விதத்தில் வெளியிட்ட கருத்தால் உலகளவில் கண்டனத்தை ஈர்த்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக விடியோ வெளியிட்ட தையல்காரர் கன்னையா கொல்லப்பட்டார். இதை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளதால் தைடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனினும், படத்திலுள்ள சில ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமித் ஜானியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அமித் ஜானிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளாதாக மத்திய அரசு வட்டாரங்கள் ஞயிற்றுக்கிழமை(ஜூலை 27) தெரிவித்துள்ளன.
அவருக்கு மத்திய ரிசர்வ் காவல் படையின் ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.