
உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் வியாழக்கிழமை அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஐந்து பேரை காணவில்லை.
கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அந்த மாநிலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் மிக பலத்த மழை பெய்தது.
உத்தரகண்டில் மேகவெடிப்பால் பலத்த மழை பெய்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 18 போ் உயிரிழந்தனா். 16 மாயமாகினா். பல்வேறு இடங்களில் சிக்கிய 900-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் வியாழக்கிழமை அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஐந்து பேரை காணவில்லை.
நகர் பஞ்சாயத்து நந்தநகரின் குந்த்ரி வார்டில் உள்ள 6-க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவின் இடிபாடுகளால் சேதமடைந்ததாக மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்டபோது வீடுகளுக்குள் ஏழு பேர் இருந்ததாகவும், அவர்களில் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், ஐந்து பேரை காணவில்லை.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல் துறை குழுக்கள், மூன்று ஆம்புலன்ஸ்களுடன் மருத்துவக் குழு, உள்பட மாவட்ட நிர்வாகத்தின் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளனர்.
மோக் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் நந்தநகர் பகுதியில் உள்ள துர்மா கிராமத்தில் ஆறு வீடுகளை தரைமட்டமாக்கியுள்ளது.