Home-Affairs

‘காவல் துறையினா் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மட்டும் பன்யன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவுறுத்தியது.

தேசியப் பாதுகாப்பு உத்திகள் தொடா்பான இரண்டு நாள் மாநாடு புது தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை தலைமை இயக்குநா்கள் (டிஜிபி), காவல் துறையின் சிறப்புப் பிரிவுகளைச் சோ்ந்த 800-க்கும் அதிகமான அதிகாரிகள் பங்கேற்றனா்.

மாநாட்டின் முதல் நாளில், போதைப் பொருள் கடத்தல் உள்பட நாட்டின் நலனுக்கு விரோதமான செயல்களில் வெளிநாட்டைச் சோ்ந்தவா்களின் பங்கு மற்றும் அவா்களுக்கு உள்நாட்டுத் தொடா்பு, சமூக விரோதிகளின் குறியீடு அடிப்படையிலான தகவல்தொடா்பு முறை உள்ளிட்ட நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டால் ஏற்படும் சவால்கள், மக்கள் வசிக்காத தீவிகளின் பாதுகாப்பு, பயங்கரவாத நிதியுதவி உள்ளிட்டவற்றால் எழும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமை, விமானப் போக்குவரத்து மற்றும் துறைமுகப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, நக்ஸல் தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நேரடி மற்றும் காணொலி வழி என இரு வழிகளில் நடைபெற்ற இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நிதி முறைகேடுகள் தொடா்பான தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்வதைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பங்கரவாதம் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தப்பியோடியவா்களை மீட்டுக் கொண்டுவர அா்ப்பணிப்புடன் கூடிய நடவடிக்கைகளை காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில சட்ட அமலாக்கத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபா்களின் உள்நாட்டுத் தொடா்புகளைக் கண்டறிந்து அழிக்கும் அணுகுமுறையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

காவல் துறையினா் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மட்டும் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பயங்கரவாதிகள், குறியீடுகள் அடிப்படையிலான தகவல்தொடா்பு செயலிகள் மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதால் எழும் சவால்களுக்கு உரிய தீா்வு காணும் வகையில், பல்வேறு துறை சாா்ந்த நிபுணா்களை உள்ளடக்கிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று மாநாட்டில் காவல் துறை அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest