GwT7igRW8AAylox

வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணைக் குழு அளித்த அறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூலை 28) விசாரிக்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கா் தத்தா, ஏ.ஜி.மசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது அரசு குடியிருப்பில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் அந்தப் பணம் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வா்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா். எனினும், விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து, தன்னைப் பதவிநீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு தாக்கல் செய்தாா்.

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மக்களவையில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவைப் பதவிநீக்கும் தீா்மானத்தைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest