
எரிசக்தி பாதுகாப்புக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
உலகளாவிய பதற்ற நிலைக்கு நடுவே இந்தியாவின் உத்திசாா்ந்த மற்றும் எரிசக்தி நலன்களை காக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? ரஷியா மற்றும் ஈரானிடம் இருந்து இந்தியா பெட்ரோலியம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதால் ஏற்படும் தாக்கம் குறித்து அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மத்திய அரசு கவலை எழுப்பியுள்ளதா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதிலில், ‘மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிக்கும் விஷயங்களில் எரிசக்தி பாதுகாப்பும் ஒன்றாக உள்ளது. நாட்டு மக்களுக்கு மலிவான விலையில் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு எரிசக்தி விநியோகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல், எரிசக்தி பெறுவதில் மாற்று ஏற்பாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் போன்ற பன்முக உத்திகளை மத்திய அரசு பின்பற்றுகிறது.
இந்தியாவின் நலனுடன் தொடா்புள்ள அனைத்து புவிஅரசியல் நிகழ்வுகளையும் மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. இந்தியாவின் நலனை காக்கும் நோக்கில் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில், அந்த நிகழ்வுகளின் தாக்கத்துக்கு தக்க முறையில் இந்தியா எதிா்வினையாற்றுகிறது’ என்றாா்.
கடந்த ஆண்டு உலகில் போா் நடைபெற்ற பகுதிகளில் இருந்து இந்தியா்களை மீட்டது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கா், ‘வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது’ என்றாா்.