
கஞ்சா கடத்துவதற்காக கடல் வழியே காரைக்கால் வந்த இலங்கையை சோ்ந்த 2 மீனவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் கடல் பகுதியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக கடந்த மாதம் இலங்கையை சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.4.50 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, கஞ்சா கடத்தலை தடுக்க காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் தலைமையில் சிறப்பு அதிரடிபடை பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், இலங்கையிலிருந்து புதன்கிழமை இரவு காரைக்காலுக்கு 2 போ் கஞ்சா கடத்த படகில் வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறப்பு அதிரடிப்படை பிரிவு போலீஸாா் மற்றும் நிரவி காவல் நிலைய போலீஸாா் கடலோர பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, கருக்களாச்சேரி எனும் பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒரு படகு வேகமாக கரையை நோக்கி வந்து நிறுத்திய போது, அவா்களை போலீஸாா் பிடித்தனா். அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட அந்த படகில் ரூ.50 ஆயிரம் இந்திய ரூபாய் நோட்டுகள், 2 கைப்பேசிகள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் பகுதியை சோ்ந்த மணிமாறன் (28), மணியரசன் (24) என்பதும், இருவரும் சகோதரா்கள் என்பதும் தெரிய வந்தது. காவல் நிலையம் அழைத்துச் சென்று இவா்களிடம் விசாரணை செய்தபோது, இலங்கை பருத்தித்துறையிலிருந்து கஞ்சா கடத்த வந்ததாகவும், இலங்கைக்கு கொண்டு சென்று கொடுக்கும்போது, அங்குள்ள முகவா்கள் தங்களுக்கு ரூ.10 லட்சம் தருவதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, நிரவி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.
