
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்தது முதல், 2-வது முறையாக, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆப்கன் மக்கள், தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியில் புகலிடம் தேடி தஞ்சமடைந்த 81 ஆப்கன் மக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, இன்று (ஜூலை 18) காலை அவர்கள் அனைவரும் தங்களது தாயகத்துக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், தற்போது நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 81 பேரும் ஆண்கள் என, ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஜெர்மனி பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ் கூறுகையில், இந்த வெளியேற்றும் பணிகள் அனைத்தும், கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் கத்தாரின் உதவியுடன் தற்போது நடைபெற்றதாகக் கூறியுள்ளார்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, ஜெர்மனியின் இதற்கு முந்தைய அரசு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்ததில் இருந்து, முதல்முறையாக அந்நாட்டில் தஞ்சமடைந்த ஆப்கன் மக்களைத் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தியது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை, ஜெர்மனி இதுவரையில் அங்கீகரிக்காத நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் முறையாகத் துண்டிக்கப்படவில்லை என பிரதமர் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
இத்துடன், ஜெர்மனியில் சட்டவிரோதமாக வசிக்கும் ஆப்கன் மக்களை அவர்களது தாயகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த நடவடிக்கைகள் எப்போது மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடவில்லை.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலின்போது, தனது பிரச்சாரத்தின் மையப் பகுதியாகக் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை பிரதமர் மெர்ஸ் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!