
வாஷிங்டன்: கத்தார் மீது தாக்குதல் நடத்தும் முடிவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவால் எடுக்கப்பட்டது என்றும், அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் நேற்று வான் தாக்குதல் நடத்தியது. தோஹாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், "கத்தார் மீது தாக்குதல் நடத்தும் முடிவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவால் எடுக்கப்பட்டது. அது எனது உத்தரவுப்படி நடத்தப்பட்டதல்ல. கத்தார் மீதான ஒருதலைப்பட்சமான தாக்குதல், அமெரிக்காவின் நலனுக்கோ இஸ்ரேலின் நலனுக்கோ உதவாது" என தெரிவித்துள்ளார்.