
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரைக் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்யோ அல்லது தவெக நிர்வாகிகளோ சென்று சந்திக்காதது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
காவல்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கரூர் தவெக மாவட்டச் செயலாளர், பொருளாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சில த.வெ.க தலைமை நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கரூர் நெரிசல் குறித்த வழக்கில் முன் ஜாமீன் வேண்டி த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் கரூர் விஜய் பிரசார கூட்டநெரிசல் மரணம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் என். ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் மீதும் இன்று (அக்.3) உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை தொடங்கி இருக்கிறது.
இதில் கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்ட மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் மறுத்து அந்த மனுவை முடித்து வைத்திருக்கின்றனர்.