
ஆறு நாள்களுக்கு முன் காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத், தெற்கு தில்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்தார். இவர் ஜூலை 7 ஆம் தேதி காணாமல் போனதாக காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டது.
சினேகா தேப்நாத் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யவுள்ளதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இதையடுத்து, காவல்துறை நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கிவிட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வசதியுடன் ஆராய்ந்ததில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. அதேபோல், பாலத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாகவும், பின்னா் அந்த இடத்திலிருந்து காணாமல் போனதாகவும் நேரில் பாா்த்த சிலா் தெரிவித்தனா்.
நிகம் போத் காட் முதல் நொய்டா வரையிலான பகுதிகளை தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) மற்றும் உள்ளூா் காவல்துறை உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், கீதா காலனி மேம்பாலம் அருகே சினேகாவின் சடலத்தை மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்டனர். மாணவியின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].