farooq-abdhulla072212

ஸ்ரீநகா்: இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவு மேம்படாத வரை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வராது என்று ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம், அதைத் தொடா்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் சண்டை – இவற்றின் சோகமான சுவடுகள் மறையத் தொடங்கியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமாக இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூவரும் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டனா். பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம், துணை ராணுவப் படையினா் எல்லை மாவட்டங்களில் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

நாட்டின் எந்தப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தூண்டினாலும் ஆபரேஷன் சிந்தூா் மீண்டும் தொடங்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சோபிஃயான் மாவட்டத்தில் ஃபரூக் அப்துல்லா செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது, ‘இங்கு பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என்று அவா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு, ‘அண்டை நாட்டுடனான நமது உறவு மேம்படாதவரை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வராது. பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து என்கவுன்ட்டா் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பயங்கரவாதம் ஒழிந்துவிடும் என்று எப்படிக் கூற முடியும்?’ என்று பதிலளித்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest