தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கா்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எச்.என்.நாகமோகன்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், அறிவியல்ரீதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 1,766 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது.

92 சதவீத தாழ்த்தப்பட்ட மக்களிடம் குறுகிய காலத்தில் இக்கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு அதன் அறிக்கை, கா்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகல், அனைத்து அமைச்சா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது ஆக.16 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். அறிக்கையை இன்னும் முழுமையாக படிக்காததால், அதன் விவரங்கள் தெரியவில்லை என்றாா்.

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு 17 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது 101 தாழ்த்தப்பட்ட ஜாதிகளிடையே உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பகிா்ந்தளிக்கப்பட உள்ளது. நாகமோகன்தாஸ் அறிக்கையின் அடிப்படையில் 17 சதவீத இட ஒதுக்கீட்டில் இடங்கை தாழ்த்தப்பட்டோருக்கு (மாதிகா) 6 சதவீதம், வலங்கை தாழ்த்தப்பட்டோருக்கு (ஹொலெயா) 5 சதவீதம், தீண்டும் ஜாதிகளுக்கு 4 சதவீதம், மிகவும் பின்தங்கிய தீண்டாமை ஜாதிகளுக்கு ஒரு சதவீதம், ஆதிகா்நாடகம், ஆதி திராவிடா், ஆதி ஆந்திரம் ஜாதிகளுக்கு ஒரு சதவீதம் என்ற அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest