gupta-coin-dcx-ed

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் முன்னணி நிறுவனமான காயின் டி.சி.எக்ஸ். மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தால், இந்த தளத்திலிருந்து 44 மில்லியன் டாலர்கள் (ரூ. 379 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், வாடிக்கையாளர்களின் முதலீட்டிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும், கருவூல கணக்கில் மட்டுமே இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சுமித் குப்தா தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் உள்செயல்பட்டுக் கணக்கில் செய்துகொண்ட தொழில்நுட்ப சமரசத்தால் இந்த ஹேக் நடந்துள்ளதாகவும், வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விடியோ வெளியிட்டு வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுமித் குப்தா பேசியுள்ளார்.

விடியோவில் அவர் பேசியதாவது,

”வாடிக்கையாளர்களுடன் எப்போதுமே வெளிப்படைத்தன்மையை விரும்புகிறது காயின் டி.சி.எக்ஸ். இதனால் வெளிப்படைத்தன்மையுடன் இதனைப் பகிர்ந்துகொள்கிறேன்.

பணப் பரிமாற்றத்தை வழங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த உள்செயல்பட்டுக் கணக்குகளில் ஒன்று முடக்கப்பட்டுள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீடுகளை சேமிக்கப் பயன்படுத்தப்படும் கணக்குகள் பாதிக்கப்படவில்லை. அவை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் சில விஷயங்களை நான் மேற்கோள் காட்டிக் கூற விரும்புகிறேன்.

  • வாடிக்கையாளர்களின் நிதியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

  • கோல்டு வாலட் எனப்படும் எங்கள் பாதுகாப்பான தொழில்நுட்ப உள்கட்டமைப்பால் உங்கள் முதலீடுகள் முழுவதும் பாதுகாப்பாக உள்ளன.

  • அனைத்துவிதமான வர்த்தக செயல்பாடுகள் மற்றும் இந்திய பணப் பரிமாற்றம் முழுவதுமாக இயக்க நிலையிலேயே உள்ளன.

ஹேக் செய்யப்பட்ட கருவூலக் கணக்கை வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து தனிமைப்படுத்தியதன் மூலம் மற்ற கணக்குகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

பாதிப்புகளைக் கண்டறிந்து பணப் பரிமாற்றத்தை கண்காணிக்க, முன்னணி இணைய பாதுகாப்பு நிறுவனங்களுடன் எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்கள் முழுநேரமும் பணியாற்றி வருகின்றனர்.

தொழில்நுட்ப பாதுகாப்பு தொடர்பாக நடக்கும் அனைத்து சம்பவங்களுமே ஒரு பாடம். இதிலிருந்து கற்றுக்கொண்டு எங்கள் தளத்தை மேலும் வலுப்படுத்துவோம். சைபர் தாக்குதல்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து நின்று போர் புரிய வேண்டிய நேரம் இது. இந்தத் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிபுணர்களுடன் இணைந்து செயல்பட எங்கள் நிறுவனம் தயாராக உள்ளது.

பணம் பாதுகாப்பாக உள்ளது என்றாலும், இதுபோன்ற சம்பவங்கள் வாடிக்கையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்கிறேன். அதனால்தான், முழு வெளிப்படைத்தன்மையுடன் இதனை வாடிக்கையாளர்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன். தொடர்ந்து எங்கள் மீது கொண்ட நம்பிக்கைக்கு நன்றி” எனப் பேசி பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,

”காயின் டி.சி.எக்ஸ். நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் இந்திய ரூபாய் திரும்பப் பெறுதல் முழுமையாக செயல்பட்டு சீராக இயங்குவதாகவும்,

வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் எந்தவித கட்டுப்பாடுகள் இல்லாமல், பணத்தை எடுக்கலாம். நாங்கள் உங்களுக்காக இங்கே இருக்கிறோம். பணத்தை திரும்பப் பெறும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் இருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

CoinDCX confirmed a 44 million 2 doller security breach, but assured customers their assets are secure.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest