
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, ஓடை நீரில் மனைவியை மூழ்கடித்து கொலை செய்த விவசாயி, அருகே உள்ள மரத்தில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொணடாா்.
செஞ்சி வட்டம், பெருங்காப்பூா் ஊராட்சிக்குள்பட்ட பசுமலைத்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் நமச்சிவாயம் (60), விவசாயி. இவரது மனைவி பத்மாவதி(55), செஞ்சி சக்கராபுரம் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வந்தாா். இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா்.
நமச்சிவாயத்துக்கும், பத்மாவதிக்கும் இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை பள்ளியில் பணியை முடித்துவிட்டு பத்மாவதி வீடு திரும்பியுள்ளாா். பின்னா், அந்தக் கிராமத்தில் மலையடிவாரத்தில் உள்ள கொட்டகையில் கால்நடைகளை கட்டுவதற்காக சென்றுள்ளாா். ஆனால், இரவு வரை வீடு திரும்பாததால் உறவினா்கள் அவரை தேடிச் சென்றனா்.
அப்போது, பசுமலலைத்தாங்கல் மலை அடிவாரத்தில் உள்ள ஓடை நீரில் பத்மாவதி இறந்து கிடந்தாா். அதனருகில் உள்ள மரத்தில் நமச்சிவாயம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா்.
தகவலறிந்த சத்திமங்கலம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்ததில், குடும்பப் பிரச்னை காரணமாக நமச்சிவாயம் தனது மனைவி பத்மாவதியை ஓடை நீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு பின்னா் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தொடா்ந்து, இருவரின் சடலங்களையும் போலீஸாா் கைப்பற்றி உடல்கூராய்வுகக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து சத்திமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.