WhatsApp-Image-2025-12-17-at-11.15.56-1

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் நாள்தோறும் சுமார் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற தனியார் நிறுவனத்துக்கு குப்பைகளை சேகரிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்காமல் ஒட்டுமொத்தமாக திருப்பூர் புறநகர் பகுதியில் முதலிபாளையம் என்ற கிராமத்தில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் அந்த நிறுவனம் கொட்டி வந்தது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், முதலிபாளையத்தில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு உயர்நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது. இடைக்காலமாக மாநகராட்சியை ஒட்டிய இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சின்னக்காளிபாளையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் குப்பைகளை தரம் பிரித்துக்கொட்ட அனுமதியளித்தது. இதற்கு இடுவாய் மற்றும் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைது

போராாட்டம்… கைது… :

இந்நிலையில், சின்னகாளிபாளையத்தில் குப்பைகளைக் கொட்ட வந்த 6 மாநகராட்சி லாரிகளை கிராம மக்கள் லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்து இடுவாய், சின்னக்காளிபாளையம், 63 வேலம்பாளையம் என பல்வேறு கிராம மக்கள் அங்கு திரண்டனர். இதனால், பொதுமக்கள் போலீஸாருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்களைக் கைது செய்ய போலீஸார் முயன்றனர். இதில், பெண்கள் மற்றும் பெண் போலீஸாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இருதரப்பிலும் லேசான காயங்கள் ஏற்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் சாணிப்பவுடருடன் போராட்டத்தில் பங்கேற்றதால், அதனை போலீஸார் தட்டிவிட்டு அப்புறப்படுத்தினர். மாடுகளுடன் வந்த கால்நடை விவசாயிகள், குப்பை கொட்ட வந்த லாரியில் மாட்டைக் கட்ட முயன்ற நிலையில் அவற்றை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டோரை குண்டுக்கட்டாக கைது செய்து போலீஸார் தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து இருதரப்பிலும் தலா 3 பேர் காயமடைந்ததாக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 14 பேர் மீது போலீஸாரைத் தாக்கியது, பணி செய்ய விடாமல் தடுத்தது, பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டம், மிருகவதை தடைச் சட்டம், ஒன்று கூடி கலகம் செய்தல் உள்ளிட்ட10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டம்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில் “திருப்பூர் மாநகராட்சியில் குப்பை எடுக்கப்படாமல் பல்வேறு பகுதிகளில் குப்பைமேடுகள் மலை இருந்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாக மர்ம நபர்கள் ஆங்காங்கே குப்பைக்குத் தீவைப்பதாக புகார்கள் எழுந்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் எங்கள் பகுதியில் குப்பை கொட்ட வேண்டாம் என்பதை வலியுறுத்தியே போராட்டத்தில் ஈடுபடுகிறோம். ஆனால் பொதுமக்களின் போராட்டத்துக்கு சற்றும் மதிப்பின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருப்பது கண்டித்தக்கது” என்றனர். மாநகராட்சியின் குப்பைகளை கொட்ட எதிர்ப்புத் தெரிவித்து வந்த கிராம மக்கள் கைது செய்யப்பட்டிருப்பது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest