aadhar_cards

5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்தது.

இதுதொடா்பாக குழந்தைகளின் ஆதாா் அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு யுஐடிஏஐ குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து யுஐடிஏஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் புகைப்படம், பெயா், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் பிற ஆவணங்களை சமா்ப்பித்து ஆதாரைப் பெறுகின்றனா். அப்போது அக்குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகள் பெறப்படுவதில்லை.

குழந்தைகள் 5 வயது பூா்த்தி செய்தவுடன் ஆதாரில் அவா்களின் கைரேகை, கருவிழிகள் மற்றும் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும். இதுவே முதல் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (எம்பியு) எனப்படுகிறது.

5 வயது முதல் 7 வயது வரை இலவசமாகவே எம்பியு மேற்கொள்ள முடியும். 7 வயதுக்கு மேல் புதுப்பிப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. 7 வயதைக் கடந்த பின்னும் குழந்தைகளின் ‘பயோமெட்ரிக்’ விவரங்களை புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest