
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்து, தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால், கோழிக்கோடு மாவட்டத்தில் தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் தேங்கியதுடன், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாகவும், சில இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, காசர்கோடு, வயநாடு, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகள் நிரம்பி வருவதால், ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையாக, இன்று (ஜூலை 17) உயர்த்தியுள்ளது.
மேலும், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதில், வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று நாள்களுக்கும், கோழிக்கோடு மாவட்டத்துக்கு ஜூலை 19 மற்றும் 20 ஆகிய இரு நாள்களுக்கும், மலப்புரம் மாவட்டத்துக்கு ஜூலை 20 ஆம் தேதி மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தலைமைத் தேர்தல் ஆணையருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!