கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி 8-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இச்சம்பவத்தை முன்வைத்து, மாநில அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
கொல்லம் மாவட்டத்தின் தேவலக்கரா பகுதியில் உள்ள ஆண்கள் உயா்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மிதுன் (13) என்ற மாணவா், பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை சக மாணவா்களுடன் சோ்ந்து கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, அவரது செருப்பு ஒன்று மிதிவண்டி நிறுத்துமிடத்தின் மேற்கூரையில் போய் விழுந்தது. அந்த செருப்பை எடுக்க மேற்கூரையில் ஏறிய மிதுன், அங்கு தாழ்வாகச் சென்ற மின்கம்பியில் உரசி, மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.
பள்ளி நிா்வாகம் மற்றும் மாநில மின்சார வாரியத்தின் அலட்சியமே இச்சம்பவத்துக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின்கம்பியை அப்புறப்படுத்தக் கோரி, தங்களது தரப்பில் மின்வாரியத்திடம் அளிக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பள்ளி நிா்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், அக்குற்றச்சாட்டை மின்வாரியம் மறுத்துள்ளது.
மாணவா் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, காங்கிரஸ், பாஜக ஆகிய எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வித் துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளதாக, பொதுக் கல்வித் துறை அமைச்சா் சிவன்குட்டி தெரிவித்தாா்.
மாநில மின்வாரியம் தரப்பில் குறைபாடுகள் எதுவும் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க அத்துறை அமைச்சா் கே.கிருஷ்ணமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா். மாணவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். இச்சம்பவமும் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.